ஒரு மாநிலத்தையே புரட்டிப்போடும் வெள்ளம் பாய்ந்தும்.. ஒழுங்கா ஒரு ஏரி கூடவா நிரம்பவில்லை..? இதுதான் தமிழகத்தின் நீர் மேலாண்மை இலட்சணம்.!

கர்நாடகாவில் கனமழை பெய்வதால் கிடைக்கும் பயனை வேளாண்மைப் பணிகளுக்கு பயன்படுத்தி முறையாக அனுபவிக்க முடியாத கொடுமையில் தமிழக விவசாயிகளைத் தள்ளி, அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இருமுறை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியும், அங்கிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராகக் கடலில் கலக்கிறது

காவிரி டெல்டா பகுதியில் 2500-க்கும் மேற்பட்ட ஏரிகளும், குளங்களும் முறையாக உரிய காலத்தில் தூர்வாரப்படாத காரணத்தால், தினமும் 2 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டும் கூட, அந்தக் குளங்களும், ஏரிகளும் நிரம்பவில்லை.

குறிப்பாக, திருவாரூரில் உள்ள ஐநூற்று பிள்ளையார் கோவில் குளம் தண்ணீரே இல்லாமல் இன்னும் வறண்டே காட்சியளிப்பது, ஆட்சியின் மோசமான நீர் மேலாண்மைக்கு உதாரணமாகத் திகழ்கிறது.

அடுத்து சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த ஏரிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது.

தற்போது வீராணம் ஏரிக்குமட்டுமே காவிரி நீர் வருவதால் அங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னை அருகில் உள்ள சோழவரம் ஏரியில் 1081 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். ஆனால் தற்போது வெறும் ஒரு மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.எனவே சோழவரம் ஏரியில் இருந்து கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு நேரடியாக தண்ணீர் அனுப்ப முடியவில்லை.

ஆகவே 3 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்தது. தண்ணீர் மிகவும் குறைந்ததால் சோழவரம் ஏரியில் இருக்கும் நீர் சேறும் சகதியுமாக உள்ளது.

எனவே இங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.புழல் ஏரியில் தற்போது 783 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. பூண்டியில் 14 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத் தில் 486 மில்லியன் கன அடியும் தண்ணீர் உள்ளது.

சோழவரத்தில் 1 கன அடி இருக்கிறது.சென்னையில் உள்ள 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி. ஆனால் தற்போது ஆயிரத்து 284 மில்லியன் கன அடி தண்ணீர்தான் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலட்சம் கனஅடி காவிரி ஆற்றில் ஏரிகள், குளங்களில் சேற்றுக்கு பதில் சொல்லும் செயல்படாத அரசாக தான் இன்றைய அரசு விளங்கி வருகிறது.