ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு பக்கத்தில் அமைந்திருக்கும் வரட்டுப்பள்ளம் அணை வழியாக பர்கூர் கிழக்கு மலைப்பாதையில் கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் சாலை அமைந்திருக்கிறது.
இந்த வழியாக இன்று காலை காலை 5.30 மணிக்கு அந்தியூரில் இருந்து தேவர்மலை, மடம் ஆகிய ஊர்களுக்கு செல்லம் அரசு பேருந்து சென்றது. அந்த பேருந்தின் ஓட்டுநராக திருநாவுக்கரசு, நடத்துனராக குணசேகரன் ஆகியோர் இருந்தனர். பேருந்தில் 10 பயணிகள் பயணம் செய்தனர்.
மலைப் பாதையின் முதல் வளைவில் சென்றபோது அங்கு தனியாக ஒரு யானை நின்றுகொண்டிருந்தது. அந்த யானை நின்றதால் நடுரோட்டில் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பஸ்சை சற்று தூரத்தில் நிறுத்தினார். ஆனால் யானை அங்கிருந்து நகர்வதாக தெரியவில்லை.
அந்த யானை வெகுநேரமாக நடுரோட்டில் வாலை ஆட்டிக்கொண்டே நின்றது. இதனால் அந்த வழியாக போக்குவரத்தில் தடை ஏற்பட்டது. அரசு பேருந்துக்கு பின்னால் பால் வாகனம், டிராவல்ஸ் வாகனம் உள்பட பல வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதனால் காலை 6.45 மணி வரை வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. பேருந்தில் இருந்தவர்களும், மற்ற வாகனங்களில் இருந்தவர்களும் யானை வந்து தாக்கிவிடுமோ என்று அச்சமடைந்தனர். எப்படியோ ஒரு வழியாக அந்த யானை 6.45 மணி அளவில் தானாகவே நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அரசு பேருந்து உள்பட அணைத்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.