கருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது? – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்

( மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவையொட்டி, அவரது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் பிரகாஷ் ராஜ். `பிரஜாவானி’ கன்னட நாளிதழுக்காக பிரகாஷ் ராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)

சென்னை. தென்னிந்தியாவின் சினிமாத் தலைநகரம். பல பத்தாண்டுகளுக்கு முன் நான் நடிகனாக அங்கே காலடி எடுத்துவைத்த பின், தென்னிந்திய நடிகனாக ‘இருவர்’ சினிமா, நாடு முழுவதும் என்னை அடையாளம் காட்டியது மட்டுமல்ல, இன்றுவரை அதுதான் என் அறிமுகமாகவும் இருக்கிறது.

தமிழ் சினிமாத் துறைக்கு வந்து சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலம்.

தமிழ் நாடாகட்டும், தமிழ் மொழியாகட்டும் இன்னும் அவ்வளவாக அறிமுகமாகவில்லை. இந்திய சினிமாத் துறையையே தன்பால் ஈர்த்திருந்த மணிரத்னம், ‘இருவர்‘ சினிமாவில் ஒரு வேடத்திற்கான ஆடிஷனுக்கு அழைத்திருந்தார்.

கலைஞர் கருணாதியைப் பிரதிபலிக்கும் வேடமொன்றிற்கு நடிகனாக என்னைக் கண்டுகொண்டார் என்று அன்று எனக்குத் தெரியாது.

கலைஞர் ஓர் அரசியல் தலைவர் என்பதைத் தவிர அவரைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது.

தாய்மொழியான கன்னடத்தில் வசனத்தை எழுதி வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்து நடித்துக்கொண்டிருந்த எனக்கு அவர் தமிழைப் பேசி நடிக்கவேண்டிய நெருக்கடியான நிலைமை.

 

எனது தமிழ் ஞானத்தைப் பார்த்த மணிரத்னம் வேறு நடிகர்களை அந்த வேடத்தில் நடிக்கத் தேடினார். தமிழ் மொழியின் உச்சரிப்பும், தமிழ்த் தன்மையும் வெளிப்படாமல் அந்த வேடத்தில் நடிக்க சாத்தியப்படாது.

தமிழ்நாட்டின் மூன்று பத்தாண்டுகளைப் பிரதிபலிக்கும் இரண்டு வேடங்களில் ஒரு வேடத்தில் நடிக்கும் அந்த அற்புதமான வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்று மனம் சொன்னது. ஆனால் அது தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த நடிகர்களுக்கும் சவாலை ஏற்படுத்தக்கூடிய கதாபாத்திரம்.

இதற்கு முன் கலைஞர் எழுதிய தமிழை யாரெல்லாம் பேசி நடித்து வெற்றிபெற்றார்கள் என்று தேடினால் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெயர் முன்னால் நின்றது.

அவருடைய முதல் படம் ‘பராசக்தி’ க்கு கலைஞர் வசனம் எழுதி இருந்தார். அந்தப் படத்தைப் பார்த்தபோது கலைஞர் தமிழ் எனக்கு பயத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக நம்பிக்கையை உண்டாக்கியது.

தந்தை பெரியாருடன் மு.கருணாநிதி

கலைஞரின் ‘சங்கத் தமிழ்’ என்னும் புத்தகத்தில் இருந்து ‘புறநானூறு’ கவிதையொன்றை எடுத்து உச்சரித்துப் பயிற்சி பெற்றேன். நான் தமிழ் கற்கத் தொடங்கியதே அங்கிருந்துதான்.

தமிழ் கற்றுக்கொள்வது என்றால் வெறும் வாக்கியங்களின் வழியாக மட்டுமல்ல. கலைஞரின் தமிழில் வரலாறு இருந்தது, சிந்தனைகளும், கலாசாரமும் இருந்தன. தன்மானம் இருந்தது.

இவற்றைக் கற்றால் மட்டுமே அந்த மொழியைக் கற்க முடியும் என்பதைப்போல இருந்தது. கலைஞரின் தமிழைப் புரிந்துகொள்வதைவிட அதன் ஆழத்தை அறிந்திருந்தால் மட்டுமே சரியாகப் பேசமுடியும்.

அப்படித்தான், மணிரத்னத்தின் ‘இருவர்’ படத்தில் நடிப்பது உறுதியானது. எனக்கு கலைஞர் கருணாநிதியுடன் இப்படித்தான் மானசீகமான அறிமுகம் தொடங்கியது.

ஒரு நடிகனின் மொழியும், சிந்தனையும் எப்படி இருக்கவேண்டும் என்று அறிந்துகொள்ள முயன்றேன்.

அவருடைய இலக்கியத் தமிழில் தென்றல் இருந்தது. அரசியல் தமிழில் புயல் இருந்தது. தென்றலில் மெய்மறந்து புயலை எதிர்த்து ‘இருவர்’ படத்தில் நடித்தேன்.

‘ஆனந்தன்’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்ட அந்தப் படம் ‘இருவர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தருணம் அது.

கருணாநிதி மற்றும் அண்ணா

எம்ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி இருவரின் வாழ்க்கையைப் பற்றிய படம் அது என்று எல்லோரிடமும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

அந்த நேரத்தில்தான் கே.பாலசந்தரின் ‘கல்கி’ படத்திற்கு முதல்வர் கருணாநிதியிடமிருந்து மாநில விருது பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.

‘இருவர்’ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தாலும், அந்த வினாடிவரை கலைஞரை நான் நேரடியாகச் சந்தித்ததில்லை.

முதல் சந்திப்பு அந்த மேடையில்தான் ஏற்பட்டது. அப்போது அவருக்கு வயது 74. எனக்கு 31. நான் விருதைப் பெற மேடையை ஏறும்போது அங்கே நிறைந்திருந்த பார்வையாளர்களிடம் ஒருவகையான உற்சாகம் தெரிந்தது.

விருது வழங்கும் விழாவின் முடிவில் கருணாநிதியின் சிறப்புரை. அன்று அவர் பேசும்போது ‘பிரகாஷ்ராஜுக்கு விருது வழங்கும்போது அரங்கில் ஒருவிதமான உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கவனித்தேன்.

அதற்கான காரணம் என்னவென்று எனக்கும் தெரியும், அவருக்கும் தெரியும். எங்கள் ‘இருவருக்கும்’ தெரியும் என்றபோது அரங்கமே சிரிப்பொலியில் மிதந்தது. இப்படி எங்கள் முதல் சந்திப்பு இதமாகத் தொடங்கியது.

 

ஆனால் ‘இருவர்’ படத்தில் நடித்த அந்த நடிகனுக்கு விருது கிடைத்தபின் அவர் மறுபடி என்னை அழைத்துப் பேசுவார் என்று ஆர்வத்துடன் காத்திருந்தேன்.

ஆனால் அவர் அழைக்கவில்லை. கலைஞர் கருணாநிதியின் தமிழைப் பேசியதால் எனக்கு தேசிய விருது கிடைத்தது. ஒரு நடிகனாக இந்தியாவிற்கே அறிமுகமானேன்.

ஆனால் தமிழ்நாட்டின் மாநில விருது கிடைக்கவில்லை. யார் தமிழைப் பேசினேனோ, யார் வேடத்தில் நடித்தேனோ அவர் கைகளால் விருதை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது.

அந்த ஏமாற்றத்தால், ‘மாநில அரசின் விருதுகள் அரசியல் விருதுகளாகிவிட்டன’ என்று பத்திரிகையொன்றுக்கு பேட்டி அளித்தேன்.

அந்த வார்த்தைகள் அவர் மனதைத் துன்புறுத்தியது. சில நெருக்கமானவர்கள் ‘அவரை ஒருமுறை சந்தித்து வா’ என்று வற்புறுத்தியபோது, ‘என் வலியின் வார்த்தைகளில் இருக்கும் நியாயம் அவருக்குத் தெரியட்டும், விடுங்கள்’ என்று சந்திக்க மறுத்தேன்.

பிறகு, பத்திரிகைப் பேட்டியொன்றில் அவருடைய பாணியிலேயே அவர் எதிர்வினை செய்தபோது நான், ‘கலைஞனின் கோபம் பிள்ளைகளின் கோபத்தைப்போல. நமக்கெல்லாம் மூத்த கலைஞரான கலைஞருக்கு அது புரியும்’ என்று சொல்லி இருந்தேன்.

என் மகன் சித்தார்த்தன் இறந்த செய்தி கேட்டு இரங்கல் கடிதமொன்றை எழுதி அனுப்பினார். அப்போது நெருக்கமானவர்கள் அவரைச் சந்தித்து வரச்சொல்லி மறுபடி வற்புறுத்தினார்கள். மகனை இழந்த மனநிலையில் ஏனோ போய்ப் பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை.

இப்படித் தொடர்ந்தது எங்கள் மவுன உறவு. ஒருமுறை அவர் மகள் கனிமொழி, தமிழ் நாட்டின் எல்லாக் கலைத்துறையில் இருக்கும் கலைஞர்களையும் ஓரிடத்தில் சேர்த்து ‘சென்னை சங்கமம்’ என்ற இரண்டு வாரக் கலை விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவின் முடிவுரை நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் ‘புறநானூறு’ படைப்பிலிருந்து ஒரு நீண்ட கவிதையை நான் வாசித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். அன்றைய விழாவின் முக்கிய தலைவர் முதல்வர் கருணாநிதி.

யார் தமிழைப் பேசக் கற்றுக்கொண்டு ‘இருவர் படத்தில் நடித்த வேடத்திற்கு பாராட்டுப் பெற்றெனோ, யாரிடமிருந்து எனக்கு விருது கிடைக்கவில்லையே என்று கோபப்பட்டேனோ, அவர் முன்னிலையில் அவருடைய ‘புறநானூறு’ கவிதையொன்றை வாசிக்கவேண்டும் . அந்த நாளும் வந்தது.

அன்று நிகழ்ச்சியின் முடிவில் கருணாநிதி பேசியபோது, நான் இதை சிவாஜிகணேசனின் குரலில் கேட்க விரும்பினேன். இன்று அவர் இல்லை.

ஆனால் அந்தக் குறையை பிரகாஷ்ராஜ் நீக்கியிருக்கிறார் என்று சொல்லி மேடைக்கு அழைத்து ‘எப்படி உங்களால் இவ்வளவு அழகாக தமிழ் பேச முடிகிறது’ என்று கேட்டார்.

நான்; `குரல் மட்டும் என்னுடையது; உணர்வு உங்களுடையது‘ என்றேன். அன்று எங்கள் இருவருக்கும் இடையே இருந்த மவுனம் முறிந்தது. அதன் பிறகு பல சந்திப்புகள், கருத்துப் பரிமாற்றங்கள்…..இதுபோல இன்னும் பல நினைவுகள். பகிர்ந்துகொள்ள இன்னும் நிறையவே உள்ளன.

நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது அவர் இல்லை என்ற செய்தி வந்தது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பை வெளிப்படுத்தும் பெரிய மனங்களின் அசைவில்லாத முகத்தை தொலைக்காட்சியில் பார்த்து மௌனமாக கண்ணீர் சிந்தினேன்.

காந்தி என்றால் அகிம்சை நினைவிற்கு வருவதைப்போல, கலைஞர் என்றால் சமூக நீதி நினைவிற்கு வரும். தன்மானத்துடன் சம உரிமைகள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற அவருடைய வாழ்க்கைப் போராட்டம் கண்முன் நிற்கும்.

மென்பொருள் தொழில்நுட்ப நிர்வாகத் துறையில் வேலை செய்யும் ஒருவர் சமூக வலைத்தளதில் ‘கார்பரேட் நிறுவனங்களில் அதி உன்னத இடத்தில் இருப்பவர்கள் வட இந்தியர்கள் அல்லது நகரங்களில் கல்வி கற்ற தலைமுறைகளாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாடு கிராமங்களிலிருந்து வந்த முதல் தலைமுறையின் பல மக்கள் பட்டதாரிகளாகி உன்னதப் பொறுப்பில் இருக்கிறார்கள்’ என்று வெளிப்படுத்தியுள்ளார்.

 

பெரியார், அண்ணா வழியில் வந்த கலைஞர் அவர்கள் எண்பது ஆண்டுகளின் சாதனை அது. இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் பிள்ளைகளுக்கு சொத்தில் சமபங்கு என்பதை சாத்தியப்படுத்தியவர்.

இந்தியாவில் முதன் முறையாக எல்லா சாதியைச் சார்ந்தவர்களும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தவர். இந்தியாவில் முதன்முறையாக 69 சதவிகிதம் ஒதுக்கீட்டை செயப்படுத்தியவர். இப்படி பல முதல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அரசியல் விமர்சனங்களையும் தாண்டி நம் நாட்டின் பன்முகச் சிறப்பை, அந்தந்த மாநில மொழிகளை, மண்ணை, கலாசார தனித் தன்மையைக் கொண்டாடும் பலரை சேர்ந்த நாடு நமதாக வேண்டும் என்று பாடுபட்டவர்.

‘உங்கள் புன்னகை எத்தனை அழகாக இருந்தாலும் அதை ஒட்டவைக்காதீர்கள்; என் சிரிப்புத்தான் எனக்கு அழகு’ என்று எல்லா மாநில மொழிகளின் சிறப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து மாநிலத் தன்மானத்தையும் மற்றும் இருப்பையும் பாராட்டியவர்.

இவை எல்லாம் அவருடைய சாதனை என்று சொல்வதைவிட சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த, மனிதாபிமான நோக்குள்ள, சமுதாய நீதித் தத்துவங்கள் என்று சொல்லலாம்.

கலைஞரின் உடல் மண்ணிலும், அவர் சிந்தனைகள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையிலும் ஒன்றிப்போய்விட்டது. விலகல் வலியைத் தந்தாலும் அவர் வாழ்க்கை, போராடத் தேவையான மன உறுதியையும், உற்சாகத்தையும் நிறைத்திருக்கிறது.

நூற்றாண்டின் தலைவனுக்கு வணக்கம்.