பொகவந்தலாவை செல்வகந்த தோட்டப்பகுதியில் தனது தாயைக் கல்லால் தாக்கிய 11வயது சிறுவனுக்கு பொகவந்தலாவை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது
தனது தாய் தனக்கு மிளகாய்த் தூளை வீசியதால் கோபமுற்றே தான் கல்லை விட்டெறிந்ததாக மகன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளான்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில்,தாக்குதலில் தலையில் காயங்களுக்குள்ளான தாய் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுவன் பாடசாலையிலிருந்து இடை விலகியுள்ள நிலையில் அயல் வீடுகளில் வேலை செய்து தனது தாய்க்கும் தங்கைக்கும் ஆதரவாக இருந்துள்ளான்.
தந்தை தலைநகரில் பணி புரிவதாகவும் அவ்வப்போது வீடு வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சிறுவனது தாயின் வலது கை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் பணிபுரிய முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவ தினமன்று மகன் வேலைக்கு செல்லவில்லை எனவும் தனது பசிக்கு ஏதாவது உணவு வழங்குமாறு தாயிடம் கேட்டுள்ளான்.
இந்நிலையில் உணவு சமைக்க வீட்டில் எதுவுமில்லை எனத் தாய் கூறவே, தாய்க்கும் மகனுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தாய் மிளகாய்த் தூளை வீசி எறிந்துள்ளார். இதனால் கோபமுற்ற மகன் கல்லை எடுத்து எறிந்ததால் தாய் காயமுற்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.