சீனக் கடற்படையின் Qian Weichang என்ற கப்பல் நான்கு நாட்கள் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தது. அண்மையில் கொழும்புத் துறைமுகத்துக்கு வெளிநாட்டுப் போர்க் கப்பல்கள் அடிக்கடி வருவது வழக்கம் என்பதால், சீனப் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்தது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து விட்டுச் சென்றது, போர்க்கப்பல் அல்ல. சீன கடற்படையின் கப்பல் என்ற வகையில் அதில், தற்பாதுகாப்புக்கான சில ஆயுத தளபாடங்கள் இருந்தாலும், அது போர்க்கப்பல் அல்ல.
அது ஒரு ஆய்வுக் கப்பல். இன்னும் விரிவாகச் சொல்வதானால், நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல், (Hydrographic survey ship).
வெளிநாட்டுப் போர்க் கப்பல்களைப் போலவே, இத்தகைய நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல்களும், இலங்கைக்கு வருவது அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கிறது. ஆனால் அது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். தர்ஷக் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களை மையப்படுத்தி, இலங்கை கடற்படையுடன் இணைந்து இரண்டு மாதங்கள் நீர்ப்பரப்பு ஆய்வை மேற்கொண்டது.
அதன் மூலம் திரட்டப்பட்ட தரவுகள், இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்டன. அது ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கை.
அதுபோல, 2018 ஒக்டோபரில் கொழும்பு வந்த இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். சுல்ரேஜ் என்ற நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல், டிசம்பர் மாதம் வரை இரண்டு மாதங்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கு கடலில் நீர்ப்பரப்பு ஆய்வுகளை மேற்கொண்டது.
இதன்போது திரட்டப்பட்ட தரவுகளும், இலங்கைக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டன.
அதுபோன்று, நோர்வேயின் Nansen research vessel கடந்த ஜூன் மாதம் கொழும்பு வந்து, கிட்டத்தட்ட நான்கு வாரங்கள், நீர்ப்பரப்பு ஆய்வில் ஈடுபட்டது.
அதுபோலத் தான், சீனாவின் Qian Weichang நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலும் அண்மையில் கொழும்பு வந்து சென்றிருந்தது.
இந்தியக் கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல்களின் பயணத்துக்கும், நோர்வேயின் ஆய்வுக் கப்பலின் பயணத்துக்கும், சீன கடற்படையின் ஆய்வுக் கப்பலின் பயணத்துக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருந்தன.
நீர்ப்பரப்பு ஆய்வு என்பது நவீன உலகில் மிகமுக்கியமானது. போருக்கும் சரி, போக்குவரத்துக்கும் சரி, பொருளாதாரத்துக்கும் சரி, நீர்ப்பரப்பு ஆய்வு மிகமிக முக்கியமானது.
நோர்வேயின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல் கொழும்பு வந்தமைக்கு முக்கிய காரணம், இலங்கையை அண்டிய கடல்பரப்பின் தன்மை, கடல் வாழ் உயிரினங்கள், அவற்றின் அடர்த்தி, அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கடலில் காலநிலையின் தன்மை உள்ளிட்ட தரவுகளைச் சேகரித்தல் தான்.
இதில் முற்று முழுதாக இராணுவ நோக்கங்கள் இல்லை என்று அடித்துக் கூற முடியாவிடினும், பெரும்பாலும் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய தரவுகளை சேகரித்தல் தான் இதன் அடிப்படை நோக்கம். கொஞ்சம் இலகுவாக சொல்வதானால், இலங்கையில் மீன்வளத்தை கண்டறிதல், அவை பற்றிய தரவுகளை சேகரித்தல் என்றும் கூறலாம்.
பொருளாதார ரீதியாக இது முக்கியமானது. இலங்கையின் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவதற்கு இந்த ஆய்வு கைகொடுக்கும். அதைவிட, கடல் வளங்களின் சமநிலையைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இந்த தரவுகள் முக்கியம்.
ஆனால், இலங்கை கடற்படைக்காக, இந்தியக் கடற்படையின் ஆய்வுக் கப்பல்கள், இரண்டு கட்டங்களாகத் திரட்டிய நீர்ப்பரப்பு ஆய்வு, பாதுகாப்பு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது.
இலங்கையைச் சுற்றியுள்ள பொருளாதாரக் கடல் எல்லைக்குள் நீர்ப்பரப்பின் தன்மை, நீரோட்டங்கள், கடலின் ஆழம், நீரின் செறிவு, நீர்ப்பரப்பில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நோக்கிலான தரவுகள் இதன் போது திரட்டப்பட்டன.
இலங்கை கடற்படை இந்த நீர்ப்பரப்பு ஆய்வின் அடிப்படையில் இன்னமும் முழுமையாகச் செயற்படவில்லையாயினும், காலப்போக்கில் அதன் செயற்பாடுகளுக்கு இந்தத் தரவுகள் மிக முக்கியம்.
அதற்கான தரவுகளை இப்போதே சேகரிக்க ஆரம்பித்துள்ளது. இலங்கை கடற்படைக்கு இந்த தரவுகளைச் சேகரித்துக் கொடுத்துள்ளதன் மூலம், இந்தியாவுக்கும் நன்மை தான். எப்படியென்றால் இந்த நீர்ப்பரப்பு ஆய்வு தரவுகள் இந்தியாவின் விரல் நுனிக்கும் வந்து விட்டது.
நோர்வே, இந்தியக் கப்பல்கள் இலங்கைக் கடற்படை அல்லது விஞ்ஞானிகளுடன் கூட்டாக நீர்ப்பரப்பு ஆய்வை மேற்கொள்ளவே இங்கு வந்தன. ஆனால் அண்மையில் வந்த சீனக் கடற்படைக் கப்பல் அவ்வாறான நோக்கில் வரவில்லை.
அது இலங்கைக்கு மேற்கொண்டது ஒரு நல்லெண்ணப் பயணத்தை மட்டும் தான். இந்தியப் பெருங்கடலில் நீர்ப்பரப்பு ஆய்வில், ஈடுபடும் பயணத்தை மேற்கொண்டிருந்த போது தான், அந்தக் கப்பல் நான்கு நாட்கள் ஓய்வெடுப்பதற்காக கொழும்புக்கு வந்து சென்றது.
2007ஆம் ஆண்டு அந்தமான் தீவுக்கு அருகே சீனக் கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல் ஒன்று ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, இந்தியக் கடற்படை அதனை விரட்டியிருந்தது.
அப்போது, அது மிகப்பெரிய அத்துமீறலாக- இந்தியாவுக்கான அச்சுறுத்தலாக கருதப்பட்டது. அதைவிட அப்போது இந்தியப் பெருங்கடலில், சீனாவின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல்கள் நடமாடுவதும் அரிது. அதனால் அதனை இந்தியா பெரியதொரு விவகாரமாக நினைத்தது.
ஆனால் அடுத்த பத்து ஆண்டுகளில் நிலைமை முற்றாகவே மாறியிருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் ஏராளமான சீனக் கடற்படைக் கப்பல்கள் நடமாடுகின்றன. நீர்ப்பரப்பு ஆய்வில் ஈடுபடுகின்றன. இவற்றை இந்தியக் கடற்படை கவலையோடு மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சீனக் கடற்படை கடந்த சில ஆண்டுகளாக தனது நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல்களை இந்தியப் பெருங்கடலில் தான் அதிகளவில் நிறுத்தி வருகிறது.
சீனா எதற்காக, இந்தியப் பெருங்கடலின் நீர்ப்பரப்பின் மீது கவனம் செலுத்துகிறது என்பதை அறிவதற்கு முன்னர், பாதுகாப்பு ரீதியாக நீர்ப்பரப்பு ஆய்வின் முக்கியத்துவத்தை மிகச் சுருக்கமாக அறிய வேண்டும்.
கடல் எப்போதும் அமைதியாக இருக்கும் ஒன்றல்ல. தரையைப் போலவே கடலிலும் பல தோற்ற வேறுபாடுகள், தன்மை வேறுபாடுகள் உள்ளன. கடலுக்குள் மலைகளும், எரிமலைகளும் உள்ளன. மரியானா போன்ற ஆழிகளும் உண்டு.
சிலவேளைகளில் கடல் அமைதியாக இருக்கும். சிலநேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும். கடலின் ஆழமும் இடத்துக்கிடம் வேறுபடும். அவ்வப்போது ஆழம் அதிகரிக்கும். சிலவேளைகளில் குறையும்.
கடலுக்கு அடியிலான நீரோட்டமும் கூட, மாறும். ஈர்ப்பு சக்தியும் வேறுபடும். நீரின் செறிவுகளிலும் வித்தியாசங்கள் இருக்கும்.
இவை எல்லாவற்றையும் கணித்தால் தான், சரியான கப்பல் பாதையை கண்டறிய முடியும். கப்பல்களின்- குறிப்பாக நீர்மூழ்கிக் கப்பல்களின் பயணங்களுக்கான வழித்தடங்களை கண்டறிய முடியும்.
கடற்புலிகள் சிறிய படகுகளில், பல நூறு, ஆயிரம் கடல் மைல்கள் வரை பயணங்களை மேற்கொண்டவர்கள். அவ்வப்போது அவர்களின் படகுகள் காணாமல் போய் விடும். என்ன நடந்தது என்றே தெரியாமல் போனதும் உண்டு. சிலவேளை திடீரெனப் படகு பிளந்து போய் மூழ்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. இத்தகைய சம்பவங்களில் புலிகளின் பல முக்கிய தளபதிகளும், பெறுமதியான ஆயுததளபாடங்களும் கூட மூழ்கிப் போயிருக்கின்றன.
இத்தகைய பல சம்பவங்களுக்குக் காரணம், கடலில் சரியான வழித்தடங்களை கண்டறியாமல் மேற்கொண்ட பயணம் தான். சரியான வழித் தடத்தில், சரியான தருணங்களைத் தெரிவு செய்து பயணங்களை மேற்கொண்டிருந்தால் இத்தகைய அசம்பாவிதங்கள் பல தவிர்க்கப்பட்டிருக்கவும் கூடும்.
பண்டைக்காலத்தில், சோழ மன்னர்கள் கடாரம் வரை சென்று ஆட்சி செய்ததாக வரலாறு. மலேஷியா, கம்போடியா, இந்தோனேஷியா வரை சோழ மன்னர்களின் ஆதிக்கம் இருந்தது.
தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து மிகக் கனமான – பாரிய தேக்கு மரங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கூட அவர்கள் இலகுவாக தமிழகத்துக்கு கொண்டு வந்திருந்தார்கள். அதற்குக் காரணம், அவர்கள் கடலின் அடியில் உள்ள நீரோட்டத்தை சரியாக கணக்கிட்டது தான். அந்த நீரோட்டத்தின் உதவியுடன் பெருமளவு பொருட்களை தமது நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இலங்கையின் வடக்கில் வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற இடங்களில் இருந்து, இந்தியாவின் காக்கிநாடா, காரைக்கால், பர்மாவின் ரங்கூன், போன்ற துறைமுகங்களுக்கு பாய்க்கப்பல்கள் இலகுவாகப் பயணம் மேற்கொண்டன. அவர்களிடம் வழிகாட்டும் எந்த கருவிகளும் இருந்ததில்லை.
அந்தக் காலகட்டத்தில், சில குறிப்பிட்ட காலத்தில் கடலில் பயணம் மேற்கொள்ளாமல் கப்பல்களை பாதுகாப்பாக துறைமுகங்களில் நிறுத்தி வைத்திருப்பார்கள்.
உதாரணத்துக்கு சித்திரை 28 ஆம் திகதியை ஒரு வானிலைக் குழப்பம் நிறைந்த நாளாக முன்னைய கடலோடிகள் கணித்திருந்தார்கள். அதற்கு முதல் 8 நாட்களும், பிந்திய 8 நாட்களும் மிகவும் எச்சரிக்கையான நாட்களாக கருதுவார்கள்.
இந்தக் காலத்தில் கப்பல்களில் பயணம் மேற்கொள்ளாமல் தவிர்ப்பார்கள். இது கடலின் தன்மையை அறிந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை. இதுபோல பல பயண உத்திகளும் தரவுகளும் ஈழத் தமிழ்க் கப்பல் மாலுமிகளிடமும் இருந்தன.
இப்போது, நீர்மூழ்கிகள் தான் முக்கியமான கடல் போர் ஆதாரமாக இருக்கின்றன. இவை கடலுக்கு அடியில் பயணம் செய்யும் போது, கடலின் தன்மையை முழுமையாக ஆய்வு செய்து அதன் பயணத்துக்கான வழித்தடம் உறுதி செய்யப்பட வேண்டும்.
சில காலத்துக்கு முன்னர் உலகெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விடயம், ஆர்ஜென்ரீன கடற்படையின் நீர்மூழ்கி ஒன்று அந்திலாந்திக் கடலில் விபத்துக்குள்ளாகி காணாமல் போன சம்பவமாகும். அந்த நீர்மூழ்கிக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. அது எங்கே போனது என்றும் தெரியாது.
அந்த நீர்மூழ்கி அதன் பயணப் பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றே பொதுவாக நம்பப்படுகிறது.
மலாக்கா நீரிணை தொடக்கம் ஏடன் வளைகுடா வரைக்குமான இந்தியப் பெருங்கடலும் கூட நிறையவே புதிர்களையும், மர்மங்களையும் கொண்டது தான்.
மலேசியன் எயர் லைன்ஸ் விமானம் இந்தியப் பெருங்கடலில் தான் காணாமல் போனது. அது இன்னமும் கண்டுபிடிக்கப்படவேயில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
இத்தகைய புதிர்கள் நிறைந்த இந்தியப் பெருங்கடலின் வழியாக தனது நீர்மூழ்கிகளை பயணம் செய்ய வைப்பதற்கு, இந்தக் கடல்பரப்பின் தன்மைகள், அது எப்போது மாற்றமடையும், எப்போது ஆபத்தானதாக இருக்கும் என்ற தரவுகள் சீனாவுக்கு முக்கியம். அ
தனால் தான் சீனாவின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல்களின் முழுமையான கண்ணும், இந்தியப் பெருங்கடலின் மீது இருக்கின்றது.
இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளுடன் பெரும்பாலும், சீனாவின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல்களும் பயணிக்கின்றன. Type 636A , Type 625C போன்ற ரகங்களைச் சேர்ந்த பல நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பல்கள், இந்தியப் பெருங்கடலில் அடிக்கடி காணப்படுகின்றன.
இந்த Type 636A ரகத்தைச் சேர்ந்தது தான் அண்மையில், கொழும்பு வந்திருந்த, Qian Weichang கப்பல். இதில் இரண்டு டசினுக்கும் மேற்பட்ட அதிநவீன ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கு மாத்திரமே இந்தியப் பெருங்கடலின் நீர்ப்பரப்பு பற்றிய தரவுகள் தேவைப்படுகின்றன என்றில்லை. அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் கூட அவை தேவைப்படுகின்றன.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசெம்பரில் அமெரிக்க கடற்படையின் பொசிடோன் ரக இராட்சத கடல் கண்காணிப்பு விமானமும் கூட மத்தள விமான நிலையத்தில் ஒரு வாரம் தரித்து நின்று ஆய்வுகளை நடத்தியிருந்தது.
அதுபோலவே கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி மத்தள விமான நிலையத்துக்கு லொக்ஹீட் P-3 விமானத்தில் வந்திறங்கிய ஜப்பானிய கடற்படையின் நீர்மூழ்கிப் பிரிவைச் சேர்ந்த படையினர், ஓகஸ்ட் 5ஆம் திகதி பயிற்சியை மேற்கொண்டிருந்தனர்.
இவையனைத்தும், இந்தியப் பெருங்கடலின் மீதும், இலங்கையைச் சுற்றியுள்ள கடலின் மீதும் வெளியுலக சக்திகள் கொண்டிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன.
நீர்ப்பரப்பு ஆய்வு என்ற பெயரில் இலங்கையை குறி வைக்கும் வெளிநாடுகள், அதற்கு அப்பால் அதனை எதற்காக பயன்படுத்த எத்தனிக்கின்றன என்பது தான் முக்கியமானது.
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Subathra அவர்களால் வழங்கப்பட்டு 27 Aug 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Subathra என்பவருக்கு அனுப்ப இங்கே