ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில், புதுமண தம்பதியர் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருமண வீட்டில் புகைப்படம் எடுக்க வந்த புகைப்பட கலைஞரின் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான கமராவுடன் பையை நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார்.
குறித்த பையினுள் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மெமரி கார்டும் இருந்துள்ளது. புகைப்படங்கள் தொடர்பில் புதுமண தம்பதியர், புகைப்பட கலைஞரிடம் கேட்ட போது அவர் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
பின்னர் இது தொடர்பில் புகைப்பட கலைஞரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமண மண்டபத்தில் இருந்த பாதுகாப்பு கமரா மற்றும் கையடக்க தொலைபேசியில் இருந்த புகைப்படங்கள் ஊடாக சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் முயற்சித்துள்ளனர். எனினும் சற்று நேரத்தின் பின்னர் குறித்த சந்தேக நபர் புகைப்பட கலைஞரை தொடர்பு கொண்டார்.
பையை மீளவும் வழங்க வேண்டும் என்றால், இரண்டு லட்சம் ரூபா பணம் கப்பமாக வழங்க வேண்டும் என அதனை திருடிய நபர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தொலைபேசி அழைப்பை அடிப்படையாக கொண்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் வீட்டில் இருந்து குறித்த பை மீட்கப்பட்டுள்ளது.