க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் காலதாமதம்?

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறையினால் இந்த காலதாமதம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை ஆசிரியர் ஒன்றியம் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளது.

பொதுவாக பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஓர் குழாமில் 14 பேர் அங்கம் வகிப்பார்கள் என்ற போதிலும் இம்முறை எட்டு ஆசிரியர்களே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறைந்தளவான கொடுப்பனவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.