புதைந்து போன தமிழக மரபுப்படி திருமணம் செய்துகொண்டு மதுரை சேர்ந்த புதுமண தம்பதியினர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
நாகரீகம் ஒருபுறம் வளர்ச்சியடைந்தாலும் தமிழன் தன்னுடைய பண்டையகால நடைமுறை பழக்கவழக்கங்கள் பலவற்றையும் மறந்து வருகிறான். அதில் ஒன்று தான் தமிழனின் திருமண முறை.
புதைந்து போன அந்த பழைய முறையினை, மீண்டும் தமிழக இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக மதுரையில் ஒரு பொறியியல் பட்டதாரி தன்னுடைய திருமணத்தை நடத்தியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த காயத்ரி என்பவருக்கும், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமணம் நடந்துள்ளது.
அன்றைய தினம் திருமணத்திற்கு செல்வதற்கு முன்பு, பண்டைய கால முறைப்படி தாரை, தாப்பட்டம் என முழங்க, மறுபுறம் சலங்கை கட்டிக்கொண்டு பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவை நடைபெற்றன.
திருமணத்தில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு ஊர்வலமாக சென்றுள்ளனர். மதுரையையே திரும்பி பார்க்க வைத்த இந்த திருமண நிகழ்வு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பாக நடந்து முடிந்தது.
அதனை அடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக, மாட்டு வண்டியில் மணமகளை அமர வைத்து, மணமகன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். பின்னர் திருமண மண்டபத்தில், பெண்களின் குலவை சத்தத்துடன் அங்கு போடப்பட்டிருந்த குடிசையில் இருவரும் அமர்ந்தனர்.
இதனையடுத்து மாப்பிள்ளைக்கு மணமகள் சார்பில் அம்மிக்கல், ஆட்டு உரல், உலக்கை, சட்டி பானைகள் போன்ற சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. மதுரையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வானது தற்போது உள்ள தலைமுறை இளைஞர்கள் பலரிடமும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் இவர்களின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.