மாமியார் இறந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரைவிட்ட மருமகள்!…

மாமியாரின் உயிரற்ற உடலைப் பார்த்து மருமகள், மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி புத்தூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் 90 வயதான ஜெயமேரி. கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு மற்றும் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயமேரி நேற்று மாலை உயிரிழந்தார்.

அவரது உடலை பார்ப்பதற்காக பாலக்கரை பகுதியில் வசித்து வரும், அவருடைய மகன் ஆல்பர்ட் மற்றும் மருமகள் சுசிலா(58) திருச்சிக்கு வருகை தந்திருந்தனர்.

ஜெயமேரியின் உடலை பார்த்து கலங்கியடியே நின்று கொண்டிருந்த சுசிலா திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், சுசிலா மாரடைப்பு காரணமாக ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மாமியார் இறந்த அதிர்ச்சியில் மருமகளும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.