குளிப்பதை பற்றி யோசித்தாலே நம் நினைவிற்கு வருவது, நுரை ததும்பும் சோப்பும் அதன் வாசமுமே. முந்தைய காலத்தில், நமக்கு மூத்தவர்களான முன்னோர்கள், அறியாத, உபயோகிக்காத விஷயங்கள் இந்த சோப்பு மற்றும் ஷாம்பூ போன்றவை.
குளிப்பது எதற்காக?
முதலில் எதற்கு தினந்தோறும் குளிக்கிறோம் என்று யோசித்து பாருங்கள். இதற்கு உடலின் அழுக்குகளை போக்க என்று பதிலளித்தால், உங்கள் உடலின் உண்மையான நிலையை கூட அறியாத நபர் என்றே பொருள்.
குளிப்பது என்பது உடலின் அழுக்குகளை வெளியேற்ற என்பதை விட, உடலில் உருவாகி இருக்கும் சூட்டை வெளியேற்றி உடலை சமநிலையில் வைக்கவே தினமும் குளிக்கிறோம்.
குளிப்பதால், உடல் புத்துணர்வு அடைகிறது, உடலிலுள்ள சூடு குறைந்து குளிர்ச்சியான அலைகள் உடலில் பரவி உடலின் சரியான வெப்பநிலை நிலைநிறுத்தப்படுகிறது.
சோப்பு அவசியமா?
வெப்பத்தை வெளியேற்ற தான் குளிக்கிறோம் என்றால், அதற்கு சோப்பு அவசியமா? என்று வினவினால், சோப்பு என்ற ஒன்றே தேவையில்லை என்று தான் பதில் கூற வேண்டும்.
நமது முன்னோர்கள் குளிக்கும் போது, வெறும் நீரை மட்டுமே பயன்படுத்தி குளித்தனர்; உடலில் அதிக அழுக்குகள் இருப்பதாய் தோன்றினால், மண், தேங்காய் நார் போன்றவற்றை பயன்படுத்தி தேய்த்துக் குளித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.
அந்தக்காலத்து பெண்களோ உடலை குளிர்ச்சியாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள கடலை மாவு, மஞ்சள், அரிசி மாவு போன்றவற்றை உடலுக்கு தேய்த்துக் குளித்தனர்.
மேலும் தலைக்கு செம்பருத்தி பூ, வெந்தயம், சிகைக்காய் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி, சோப்பு மற்றும் ஷாம்பூ என்றால் என்ன என்று தெரியாமலே ஆரோக்கியமாக மற்றும் அழகாக இளமையுடன் நீடுழி வாழ்ந்து வந்தனர்.
எப்படி குளிக்க வேண்டும்?
குளிப்பது என்பது உடல் முழுதும் தண்ணீரை ஊற்றி, நுரைக்க சோப்பு தேய்த்து, மீண்டும் அந்த சோப்பை நீக்க உடலில் மேலும் தண்ணீரை ஊற்றி துடைத்துவிட்டு வருவதல்ல. குளிப்பது என்பது உடல் சூட்டை வெளியேற்ற என்று படித்தறிந்தோம். உடலின் சூடு திறந்த பக்கங்கள் வழியாக தான் வெளியேற இயலும்; உடலில் திறந்த பாகங்கள் என்பது கண், காது, மூக்கு, வாய் போன்றவையே ஆகும்.
எனவே, உச்சி முதல் பாதம் வரையிலான சூட்டை வெளியேற்ற, முதலில் நீரை பாதங்களில் ஊற்றி, பின் முழங்கால், தொடைகள், வயிறு, மார்பு, முகம் என படிப்படியாக நீரை ஊற்றி உடலில் இருக்கும் ஒட்டுமொத்த சூடும் முழுவதுமாக வெளியேற வழிவகை செய்யுங்கள்.
ஆனால், எல்லாவற்றுக்கும் முன்னதாக சில துளி நீரை தலையில் தெளித்த பின் பாதத்தில் தண்ணீரை ஊற்ற வேண்டும். ஏனெனில் பாதத்திலிருந்து வெளியேறும் சூடு தலையில் இருக்கும் மூளையை பாதித்து விடாமல் இருக்கவே, இவ்வாறு தண்ணீரை தலையில் தெளிப்பது.
குளத்தில் குளிக்கும் போது அல்லது சுவிம்மிங் குளத்தில் குளிக்கும் போது தலையில் தண்ணீர் தெளித்த பின்னரே உள்ளிறங்க வேண்டும்.
சோப்பு வைக்கும் ஆப்பு!
சோப்பினை சருமத்திற்கு தேய்த்து குளிப்பது, உடல் அழுக்குகளை நீக்கும்; உடலுக்கு நல்ல நறுமணத்தை தரும் என்று நாம் ஆழமாக நம்ப வைக்கப்பட்டு உள்ளோம். ஆனால், உண்மையில் சோப்பினை பயன்படுத்துவதால், சருமம் அதிகம் வறண்டு போய் விடுகிறது.
சருமத்தின் செல்கள் இறந்து அல்லது விரைவில் முதுமையை அடைவதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், முதுமையான தோற்றம் இளமையிலேயே ஏற்படுகிறது.
இதை மறைக்க பற்பல கிரீம்கள், ஷாம்பூ, லோஷன்கள் போன்றவற்றை நாம் பயன்படுத்தியாக வேண்டும். அந்தக் கட்டாயத்திற்கு நம்மை நம் உடலின் அழகு நிலை தள்ளி விடுகிறது.
இதை படித்த பின் நம்மை சுற்றி என்ன நடக்கிறது. நாம் நமது பாரம்பரியத்தை விட்டு எப்படி பிரித்து செல்லப்படுகிறோம். எப்படி அனைத்துவித சரும பராமரிப்பு பொருட்களையும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் போன்ற விஷயங்கள் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.