தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம் கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நகரில் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருபவர் 24 வயதான மணிகண்டன்.
கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகளை வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்து தந்து அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னையும் தன்குடும்பத்தையும் காப்பாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் திகதி காலை செங்குத்தான மலைப்பகுதிகளில் ஒன்றான ‛டால்பின் நோஸ்’ பகுதியில் சில சுற்றுலாப்பயணிகளை நிற்கவைத்து படம் எடுத்துக் கொண்டு இருந்தார்.
சுற்றுலாப்பயணிகளை உற்சாகமூட்டி பல கோணங்களில் நகர்ந்து நகர்ந்து படம் எடுத்துக் கொண்டிருந்தவர், கால் திடீரென இடறியதில் கண நேரத்தில் சரசரவென சறுக்கிக்கொண்டே போய் மலைப்பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார்.
அந்த இடத்தின் பயங்கரத்தை, பாதாளத்தை நன்கு அறிந்த மணிகண்டன் பயணிகளை எப்போதும் எச்சரித்துக் கொண்டே இருப்பாராம்.
மணிகண்டன் பள்ளத்தில் இடறி விழுந்ததைக் கண்ட சுற்றுலா பயணிகள் அலறினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மிகவும் சிரமப்பட்டு பள்ளத்தாக்கில் இறங்கி உயிருக்கு துடித்துக் கொண்டு இருந்த மணிகண்டனை உடனடியாக டோலிகட்டி மேலே துாக்கிவந்தனர்.
சின்னதாய் காயங்கள் இருந்தனவே தவிர உடலில் பெரிதாக எதுவும் அடிபடவில்லை ஆனால் மயக்க நிலையில்தான் மணிகண்டன் இருந்தார்,
உடனடியாக அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சைக்கு பின்னரும் மணிகண்டனுக்கு உயிர் இருந்ததே தவிர உணர்வு திரும்பவில்லை.
இந்த நிலையில் மருத்துவர்களின் கடும் போராட்டம் பலனளிக்கவில்லை, அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ள.
இதனிடையே அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வது மட்டுமே முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்லிவிட கதறி அழுத உறவினர்கள், மற்றவர்கள் உருவிலாவது மணிகண்டன் வாழட்டும் என்று முடிவு எடுத்து உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து, இருதயமும் நுரையீரலும் சென்னை மலர் மருத்துவமனையில் உள்ள இருவருக்கும், ஒரு சீறுநீரகம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஒருவருக்கும்,
ஒரு சீறுநீரகம் மற்றும் கல்லீரல் மதுரை வேலம்மாள் மருத்துவமனையி்ல் இருந்த இருவருக்கும், இரண்டு கண்களும் மதுரை அரவிந்த் மருத்துவமனையில் இருந்த இருவருக்கும் என ஏழு பேருக்கு மணிகண்டனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
தற்போது மணிகண்டன் ஏழு பேராக வாழ்ந்து கொண்டிருப்பதாக அவரது உறவினர்கள் கண்கலங்கியுள்ளனர்.