தனது மூளையிலிருந்த கட்டியை அகற்ற மருத்துவர்கள் 9 மணி நேர சிக்கல் மிக்க அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டபோது பெண்ணொருவர் விழித்திருந்தவாறு பாடல்களைப் பாடியவாறும் நகைச்சுவைக் கதைகளைக் கூறியவாறும் இருப்பதை வெளிப்படுத்தும் வியப்பூட்டும் காணொளிக் காட்சியொன்று அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தின் கிளா ஸ்கோ பிராந்தியத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியையும் நகைச்சுவைக் கலைஞருமான சாரா மே பிலோவே (35 வயது) இவ்வாறு தனது மூளையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்போது புன்னகையுடன் பாடிக் கொண்டும் நகைச்சுவைக் கதைகளை கூறிக் கொண்டும் இருந்துள்ளார்.
அவர் பயிற்சி பெற்ற பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த வருடம் டிசம் பர் மாதம் சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதே அவருக்கு மேற்படி நோய் ஏற்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டது.
இந்த சத்திரசிகிச்சையின் போது சாராவுக்குத் தெரியாமல் கடந்த 15 வருட காலமாக அவரது தலையில் விருத்தியடைந்திருந்த கட்டியின் 85 சதவீதமான பகுதி அகற்றப்பட்டுள்ளது.