இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தை சீனாவைவிட ஜப்பானும், அமெரிக்காவும் குறி வைக்கின்றன என்று பங்களாதேஷ் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பங்களாதேஷின் பிடிநியூஸ் 24 என்ற இணையத்தளம் வெளியிட்ட ஆய்வு செய்தியில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை துறைமுகம் 1930ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் பிரதான தளமாக விளங்கியது.
அங்கு பிரித்தானியர்கள் 101 எரிபொருள் கொள்கலன்களை அமைந்திருந்தனர். அவற்றின்மீது இரண்டாம் உலகப்போரின் போது 1942 ஏப்ரல் 9 இல் ஜப்பானிய தற்கொலை விமானமான கமிகாஸ் தாக்குதல் நடத்தியது.
இதன்போது 700 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் 2000ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் அந்த எரிபொருள் கொள்கலன்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு கையளித்தது.
எனினும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் தமது எரிபொருள் கொள்கலன்களை அதிகரித்துக்கொள்ளும் நோக்குடன் திருகோணமலை துறைமுகத்தை இந்தியா நோக்கியது.
அதேநேரம் ஜப்பானும் திருகோணமலை துறைமுகத்தின்பால் தமது கவனத்தை செலுத்தியுள்ளது.
இலங்கைக்கு அண்மையில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட விஜயம் மிகவும் முக்கியம்மிக்கது.
இதேநேரம், சீனாவுக்கு போட்டியாக அமெரிக்காவும் திருகோணமலை துறைமுகத்தை குறிவைத்து பல கப்பல்களை அங்கு அனுப்பி வருகிறது.
எனினும் இலங்கை அரசாங்கம் இந்திய மற்றும் ஜப்பானிய உதவியுடன் திருகோணமலை துறைமுகத்தை புனரமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவுக்கு அடுத்தப்படியாக 2017-18 காலப்பகுதியில் ஜப்பானின் 65 கப்பல்கள் இலங்கைக்கு வந்துசென்றுள்ளன என்று பங்களாதேஷ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.