எதிர்வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு வெள்ளத்தில் மிதக்கலாம் என்றொரு எதிர்வுகூறல் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட புவியியல் துறை பேராசிரியர் நோபர்ட் அன்ரனி தெரிவித்துள்ளார்.
அண்மையில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஊடகமொன்றிட்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும்,
சென்னையில் ஏற்பட்ட மழைவீழ்ச்சிக்கு பிரதான காரணம் எல்நினோவினுடைய தாக்கம். எல்நினோவினுடைய தாக்கம் வளிமண்டலத்திலே மழைவீழ்ச்சியை ஏற்படுத்துவதற்கான சூழலை தோன்றச் செய்கிறது.
ஆனால் கரையோர பகுதியிலே அழிவை ஏற்படுத்துகின்ற சூழலை மக்கள் ஏற்படுத்துகின்றனர். கேரளாவிலே மலைப்பகுதிகளில் குறிப்பாக இடுக்கி போன்ற பிரதேசங்கள் தான் மிகக்கூடுதலாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
எர்நாகுளம், இடுக்கி, கோழிக்கூடு போன்ற பகுதிகளில் தான் கூடுதலான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாமல் கேரளாவினுடைய தென்பகுதியும், நடுப்பகுதியும், மலை சார்ந்த பிரதேசங்களும் மிகக்கூடுதலாக பாதிப்பிற்கு உட்பட்டிருக்கின்றன.
2011ஆம் ஆண்டு இந்த பகுதியில் இந்தியாவினுடைய மேற்குக்கரை பகுதியில் வெஸ்டன் கெட்ஸ் மலைத்தொடர் காணப்படுகிறது.
ஒரு இலட்சத்து 40,000 கிலோமீற்றர் நீளமான மலைத்தொடர் பகுதிகளில் மக்கள் சூழலை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பான ஒரு முக்கியமான அறிக்கையை கட்கில் என்பவர் 2011ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு சமர்ப்பித்திருக்கிறார்.
அதாவது இந்த பகுதிகளை 3 வலயங்களாக பிரித்து அந்த பகுதிகளில் மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பு முறைகள் என்ன என்பதை அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகள் அதனை கவனத்தில் எடுக்கவுமில்லை. மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இதன் விளைவாக மண் அகழ்தல், கல் அகழ்தல் போன்ற நிலைமைகள் 1500 இற்கும் மேற்பட்ட இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்துடன் உயர்மாடிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுலா மையங்களுக்கான கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான சூழல் இயல்புகளுக்கு ஒவ்வாத பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றின் காரணமாக தான் இந்த நடவடிக்கைள் ஏற்பட்டுள்ளன.
வோஷிங்டன் டிக்ளயர் என்கின்ற உலக சூழலியல் அறிக்கையில் ஒரு முக்கிய ஆவணமாக, ஐ.நாவின் சூழலியல் நிகழ்ச்சித் திட்டத்தில் ஒரு முக்கிய ஆவணமாக சொல்லப்படுகின்ற அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கின்றது என்னவென்றால் மனிதன் பூமிக்கு சொந்தமானவன்.
பூமி மனிதனுக்கு சொந்தமானது அல்ல. ஆகவே இந்த நீர் வளங்களை மற்ற மாநிலங்களுடன் பகிர்வதற்கு விருப்பமில்லாத ஓர் நிலையில் இயற்கையாகவே உங்களுக்கு பெருமளவான நீரை தந்திருக்கின்றோம் என்று இயற்கையே ஒரு அழிவை கொடுத்திருக்கிறது.
அது மாத்திரமல்லாமல் அடுத்து வரும் டிசம்பர் மாதத்தில் வருகின்ற எல்நினோவின் தாக்கத்தினால் தமிழ்நாடு வெள்ளத்தில் மிதக்கலாம் என்றொரு எதிர்வுகூறலும் தெரிவிக்கப்பட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.