திருமணம் ஒன்றின்போது மணமக்கள் முன்னிலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் மணமகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
குருநாகல் மாவட்டம் ஹெட்டிப்பொல என்ற இடத்திலேயே இந்தச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
பௌத்த மத முறைப்படி நடைபெற்ற குறித்த திருமண வைபவத்தின் பின்னர் மணமக்கள் இருவரும் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் மணமகன் மகிழுந்திலிருந்து இறங்கி மணமகளை கைகொடுத்து இறக்கியபோது திடீரென்று சீனப் பட்டாசுகள் வெடிக்கவிடப்பட்டுள்ளன.
முதலாவது பட்டாசு மணமக்களின் மிக அருகில் வெடித்ததனால் இருவரும் சற்று பதறியடித்துள்ளனர். எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் துள்ளிக்குதித்து அலறிய மணமகள் அப்படியே மயங்கி விழுந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் மகிழுந்தின் கதவுடன் மணமகளின் தலை மோதியதால் சிறு காயம் ஏற்பட்டதுடன் தலையில் போடப்பட்டிருந்த கொண்டை முடி அலங்காரமும் கலைந்தது.
இதனையடுத்து அவ்விடத்தில் சற்று நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டாலும் சிறிது நேரத்தின் பின்னர் மணமகள் மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார்.அண்மைக் காலங்களில் தென்னிலங்கையில் நடைபெறும் திருமணங்களின்போது சீனப் பட்டாசுகள் வெடிக்கவிடப்பட்டு மணமக்கள் வரவேற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.