ஈரானுக்கு எதிரான தடைகள் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்க ஐக்கிய நாடுகள் நீதிமன்றத்திற்கு சட்ட அதிகாரம் கிடையாது என அமெரிக்கா நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
அணுசக்தி பரிசோதனைகள் தொடர்பில் தனது நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகளை இரத்துச் செய்ய ஐக்கிய நாடுகள் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டும் என ஈரான் கோரியிருந்த நிலையிலேயே அமெரிக்கா இவ்வாறு நிராகரிப்பை வெளியிட்டுள்ளது.
பொருளாதாரத் தடைகளால் தனது நாடு துன்பத்தை அனுபவித்து வருவதாக தெரிவித்து ஈரானால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று குறித்து ஐக்கிய நாடுகள் நீதிமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது சட்ட ரீதியான நடவடிக்கை பாதுகாப்பு தொடர்பான கவலையை தோற்றுவிப்பதாக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்தேசிய அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து தனது நாட்டை வாபஸ் பெற நடவடிக்கை எடுத்ததன் மூலம் 1955 ஆம் ஆண்டு ஒப்பந்தமொன்றை மீறியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள சட்டத்தரணி நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், அமெரிக்காவுக்கு தனது தேசிய பாதுகாப்பையும் ஏனைய அக்கறைகளையும் பாதுகாக்க உரிமை உள்ளது எனவும் அதன் பிரகாரம் மேற்படி உடன்படிக்கையை அடிப்படையாக வைத்து நீதிமன்றம் இது தொடர் பில் நியாயஸ்தம் செய்ய முடியாது எனவும் கூறினார்.