பச்சிளம் குழந்தை கிணற்றிற்குள் தவறிவீழ்ந்து பரிதாபமாகப் பலி!

அராலி மேற்குப் பகுதியில் ஒரு வயதுக் குழந்தை கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

மேற்படி பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் நிலக்சன் என்ற ஆண் குழந்தையே நேற்று (29.08.2018) இவ்வாறு உயிரிழந்துள்ளது.நேற்று மாலை 3.30 மணியளவில் தாயுடன் முற்றத்தில் இருந்து விளையாடிக் கொண்டிருந்த குறித்த குழந்தை,அருகிலிருந்த கிணற்றடிக்கு நடந்து சென்றுள்ளது.

செடிக்கிணறாக இருந்த கிணற்றை எட்டிப்பார்த்த குழந்தை, அப்படியே உருண்டு கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதனை யாரும் கவனிக்கவில்லை.சுமார் அரைமணி நேரம் கழித்துத் தண்ணீர் அள்ளுவதற்காகக் கிணற்றடிக்குச் சென்ற குழந்தையின் ஒன்றுவிட்ட சகோதரன் தான் (வயது-15) கிணற்றுக்குள் இறங்கிக் குழந்தையைத் தூக்கியுள்ளார்.

உடனே அயலவர்கள் திரண்டு குழந்தைக்கு முதலுதவி அளித்ததுடன், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்குக் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.அங்கே குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர் குழந்தை உயிழந்துவிட்டது என்று கூறியதுடன், பிரேத பரிசோதனைக்காகக் குழந்தையை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

இதுதொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.