விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அருகே உள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள் வயது 57. இவரது கணவர் இறந்துவிட்டார். மேட்டு வடகரையில் உள்ள தனியார் பள்ளியில் சமையல் உதவியாளராக பணி செய்து வந்தார்.
நேற்று இரவு இவரது வீட்டில் உறங்கிகொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து காளியம்மாளை சரமாரியாக அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவர் வைத்திருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இன்று காலை காளியம்மாள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கீழராசகுலராமன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் காவல் ஆய்வாளர் திரு.பார்த்திபன் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது காளியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காளியம்மாள் நகைகளுக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம்? உள்ளதா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.