ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்….. கசந்த காதல் வாழ்க்கை.!

விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் காவல் சரகத்திற்கு உட்பட்ட குடல்குடி நத்தம் எனும் கிராமத்தை சார்ந்தவர் தினேஷ் வயது 25. இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி 18 என்பவரும் காதல் ஏற்பட்டது.

இவர்கள் தனது காதலை தங்களது வீட்டில் தெரிவித்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டது. பின்னர் இருவரும் மதுரையில் குடியேறினர். இருவரது குடும்பத்தினரும் இவர்களுடன் இந்த வித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.

திருமணம் செய்து சில நாட்களிலேயே காதல் கசந்து அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ் மனவருத்ததுடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் பிரிந்து அவர்களது வீட்டிற்கே சென்று விட்டனர்.

இந்நிலையில், காளீஸ்வரி குடும்ப பிரச்சினை தொடர்பாக அவரது கணவரான தினேஷ் மீது சாத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக காவல் துறையினர் தினேசை அடிக்கடி அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தனது மனைவி மீண்டும் மீண்டும் காவல் துறையில் புகார் கொடுத்ததால் மேலும் மனவேதனை அடைந்த தினேஷ் சம்பவத்தன்று தனது ஊரின் அருகே உள்ள சிவலிங்காபுரம் குளக்கரை அய்யனார் கோவிலுக்கு சென்று வி‌ஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழராசகுலராமன் போலீஸ் ஆய்வாளர் திரு.பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

காதல் திருமணம் செய்து கொண்டது மற்றும் மனைவி காவல் நிலையத்தில் மேலும் மேலும் கொடுத்த புகாரால் வாலிபர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.