யாழ்ப்பாண குடாநாட்டில் சமூக விரோத குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட ஆவா குழுவுக்கு தலைமை வகித்து வரும், அந்த குழுவின் ஆரம்ப தலைவரான ‘ஆவா’ என்ற குமரேசரத்னம் வினோதன் என புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்
.ஆவா என்ற வினோதன், அந்த குழுவின் ஆரம்ப உறுப்பினரான மோகன் அசோக் என்பவருடன் இணைந்து இந்த குழுவை வழிநடத்தி வந்துள்ளார். பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் தொழில்நுட்பங்கள் வழியாக இந்த குழுவினர் தொடர்புகளை கொண்டுள்ளனர் என புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் கூறுகின்றன.
பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள இந்த நபர்களை கைது செய்ய பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வட மாகாண பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய், மானிப்பாய் பொலிஸ் பிரதேசங்களில் நடந்த தாக்குதல், வாள்வெட்டு, சொத்துகளை சேதப்படுத்தியமை போன்ற பல குற்றச் செயல்களுடன் ஆவா குழு சம்பந்தப்பட்டுள்ளதுடன் அச்சம்பவங்கள் தொடர்பான 20க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் வீடுகளிலும் தீவுகளில் மதுபான விருந்தை நடத்தியுள்ளனர். இவற்றில் கலந்துக்கொண்டவர்கள் 18 வயது முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், ஆவா குழுவின் உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்புகளை பேணி வந்ததால், அவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் தவறியுள்ளனர்.இதனால், சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் துரிதமான விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் தனுஷன் மற்றும் கனோஜ், ஆவா குழுவின் மோகன் அசோக்குடன் விரோதமாக இருப்பதாகவும், இதனால் மூன்று குழுக்களை சேர்ந்து நடக்கும் மோதல்கள், வாள் வெட்டு, தாக்குதல் போன்ற குற்றச் செயல்களுக்கு காரணமாக இருப்பதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
sourse: tamilwin.com