விக்கிக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பேன்!

“வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை அவசரப்பட்டுச் செய்ய முடியாது. விக்னேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களை அலசி ஆற அமர இருந்து ஆராய்ந்து உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் பணிமனைத் திறப்பு விழாவில் உரையாற்றும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தோல்வியடைந்து விட்டதாகத் தெரிவித்திருந்தார். அத்துடன் அரசியலில் தனக்கு முன்பாக 4 தெரிவுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பதைக் கேட்டபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“விக்னேஸ்வரனை வடக்கு முதலமைச்சராகக் களமிறக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கி அவரை முதலமைச்சராக்கியது வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான் பங்களிப்புச் செய்தது என்பதை அவர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்தநிலையில், கூட்டமைப்பின் தலைமையை விமர்சித்து அவர் தனது பக்க நியாயங்களை மாத்திரம் முன்வைத்துள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை நாம் அவசரப்பட்டு முன்வைக்க முடியாது. ஆற அமர்ந்து அவர் முன்வைத்து கருத்துக்களை அலசி ஆராய்ந்து தக்க நேரத்தில் உரிய பதிலை வழங்குவேன்” – என்றார்.