இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 30 தேதி தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்தில் சௌதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து 246 ரன்களும், இந்தியா 273 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்க்ஸில் 271 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 48, பட்லர் 69, சாம் கர்ரன் 46 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்ற அபாயத்தோடு களம் இறங்கியது இந்தியா.
இந்தியாவுக்கு முதலிலேயே அடி கிடைத்தது. பிராட் பந்தில் ராகுல், ஆண்டர்சன் பந்துவீச்சில் தவான், புஜாரா வெளியேற இந்தியா 22 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்தது. அப்போது கேப்டன் கோலி மற்றும் ரஹானே இணைந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்தனர். கோலி அரைசதம் அடித்த நிலையில், 58 ரன்களுக்கு மொயீன் அலி பந்தில் ஸ்லிப்பில் நின்று இருந்த குக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பண்டியா 0, ரிஷப் பண்ட் 18 ரன்களிலும் வெளியேறினர்.
அவரை தொடர்ந்து ரஹானேவும் 51 ரன்களில் வெளியேற இந்தியா 153 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தவித்து வந்தது. இறுதியாக அஸ்வின் சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். பின்வரிசை வீரர்களும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. இறுதியாக அவர் 25 ரன்களில் வெளியேற, இந்தியா 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி 4, ஆண்டர்சன் 2, ஸ்டோக்ஸ் 2, பிராட் 1, சாம் கர்ரன் 1 என விக்கெட்கள் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக முதல் இன்னிங்க்ஸில் 5 மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸில் 4 விக்கெட்கள் வீழ்த்திய மொயீன் அலி தேர்வு செய்யப்பட்டார்.