தோழியுடன் பேசிய மாணவனை கட்டி வைத்து அடி உதை….

ஆம்பூர் அருகே பிளஸ் 1 மாணவன் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவன், மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த மாணவன் உறவினர் பெண்ணும் அதே பள்ளியில் படிக்கிறார். இவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். பள்ளி வளாகத்தில் வழக்கம் போல மாணவியுடன் பிளஸ் 1 மாணவன் நேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பள்ளியில் படிக்கும் பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒருசில மாணவர்கள் வந்து பிளஸ்1 மாணவனையும், மாணவியையும் சேர்த்து வைத்து ஆபாசமாக பேசியுள்ளனர்.

அந்த மாணவர்களை பிளஸ் 1 மாணவன் கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள், பிளஸ்-1 மாணவனையும், மாணவியையும் மிகவும் மோசமாக பேசியுள்ளனர். இதையடுத்து, பிளஸ் 1 மாணவன் மற்றும் அவர் நண்பர்கள் சிலர் சேர்ந்து கொண்டு தகராறு செய்த மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களின் மோதலை ஆசிரியர்கள் தடுத்து சமரசம் செய்தனர். இந்த விவகாரம் மாலையில் பெரும் பிரச்னையாக வெடித்தது. பள்ளிக்கு வெளியே மீண்டும் இருதரப்பு மாணவர்களும் ஆவேசமாக மோதிக் கொண்டனர்.

பின்னர், வீடு திரும்பும் வழியில் பிளஸ் 1 மாணவனை எதிர்தரப்பு மாணவன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மாணவன் தாக்கப்பட்டதை அங்கிருந்த ஒரு வாலிபர் செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இப்போது, இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மாணவன், சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசில் மாணவன் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிராஜ் (48), சிங்காரம் (57) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மாணவன் மற்றும் அவன் பெற்றோரை தேடி வருகின்றனர்.