தண்ணீரில் கண்டம்….! அதற்கான பரிகாரம் என்ன?

தண்ணீர் என்பது நாம் உயிர்வாழ அவசியமான ஒன்று நமக்கு நீரை வழங்கும் ஆதாரமாக ஏரிகள், குளங்கள், நதிகள் போன்றவை இருக்கின்றன. இதை தவிர்த்து உப்பு தன்மை நிறைந்த கடலும் இருக்கின்றன.

இப்படிப்பட்ட நீர்நிலைகளில் நீந்த செல்லும் சிலர் அதில் மூழ்கி இறந்து போவதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இப்படி தண்ணீரில் கண்டம் ஏற்படுவதற்கான காரணங்களையும் அந்த கண்ட ஆபத்தை தவிர்க்கும் வழிமுறைகளையும் காண்போம்.

ஜாதகத்தில் ஒருவருக்கு இரண்டாம் வீடு தேய்பிறை சந்திரன் பார்வை பெற்றாலும், சந்திரனின் கோட்சாரம் சரியில்லாத நிலையில் இருப்பவர்கள், ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் தேய்பிறை சந்திரன் இருந்தாலும், அந்த எட்டாம் இடத்தில் தேய்பிறை சந்திரனோடு சுக்கிரன் கிரகம் இணைந்திருந்தாலும், அந்த ஜாதகருக்கு நீர்நிலைகளில் பிரவேசிக்கும் போது உயிருக்கு ஆபத்தான கண்டம் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட ஜாதக அமைப்பை கொண்ட சில நபர்களுக்கு சந்திரன் கிரகம் மாரகம் என்கிற மரணத்தை ஏற்படுத்தும் கிரகமாக மாறுகிறது.

அருவி, குளம், ஏரி, நதி, கடல் போன்ற நீர்நிலைகள் சந்திரன் ஆதிபத்யம் நிறைந்த இடங்கள் ஆகும். சந்திரன் எவ்வாறு அழகோ அது போல இத்தகைய நீர்நிலைகளின் அழகில் மயங்காத மனிதர்களே இருக்க முடியாது. இந்த நீர்நிலைகளை கரையோரங்களில் இருந்த படியே அனைவரும் ரசிப்பதில் எந்த வித பிரச்சனைகளும் இல்லை.

ஆனால் மேற்கூறிய ஜாதக அமைப்பு மற்றும் சந்திரன் கிரகம் கெடுதலான நிலையில் இருப்பவர்கள் இப்படிப்பட்ட நீர்நிலைகளை கண்டவுடன் தங்களுக்கு நீச்சல் தெரியுமா அல்லது தெரியாதா என்பதை பற்றி கவலைப்படாமல், நீர்நிலைகளின் சாதக பாதகங்களை அறிந்து கொள்ளாமல், மற்றவர்களை கவர்வதற்காகவும், தங்களின் வீரதீரத்தை காட்டுவதாகவும் நினைத்து இத்தகைய நீர்நிலைகளில் இறங்கி விடுகின்றனர்.

இவர்களை போன்ற நபர்களுக்கு நீர்நிலைகளில் இறங்குவதற்கு முன்பு தங்களின் சக்தி என்ன என்பது நன்கு அறிந்திருந்தும், அந்நேரத்தில் இவர்களின் தெளிவாக சிந்திக்கும் திறன், ஆர்வமிகுதி மற்றும் உற்சாக உணர்வுகள் போன்றவற்றால் மழுங்கடிக்கப்படுகிறது.

பரிகாரம்:

திங்கட்கிழமைகளில் சந்திர பகவானையும், சிவபெருமானையும் வணங்குபவர்களுக்கு நீர்நிலைகளில் கண்டம் ஏற்படுவது நீங்குகிறது.

மூன்றாம் பிறை தரிசனம் செய்பவர்களுக்கும் தண்ணீரில் கண்டம் ஏற்படும் நிலை நீங்கும்.