பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை சிலரது உடலால் ஜீரணிக்க முடியாது. இந்தப் பிரச்னை லாக்டோஸ் இன்டோலரன்ஸ் எனப்படுகிறது.
இத்தகைய பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.இவர்கள் மோர் குடிப்பதன்மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற முடியும். ஒரு கப் மோரில் 350 மில்லி கிராம் கல்சியம் உள்ளது. ஆனால், பாலில் 300 மில்லி கிராம் கால்சியம்தான் இருக்கிறது.
தயிருடன் தண்ணீர், உப்பு கலந்த மோர்க்கலவையைக் குடித்தால் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாது. தயிரில் செரிமானத்துக்கு உதவும் புரோபயோடிக்ஸ் பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோராக மாற்றும் போதும் இதே நன்மைகள் கிடைக்கின்றன. அதிகளவில் ஏப்பம் விட்டுக்கொண்டே இருக்கும் பிரச்னைக்கும் மோர் தீர்வு தருகிறது.
மோரில் வைட்டமின் பி-2 உள்ளது. இது நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்ற உதவுகிறது. வைட்டமின் பி-2 செல்களிலுள்ள என்சைம்களின் செயல்பாட்டை ஆரம்பித்து வைக்கும். இது சக்தியாக மாற்றப்பட்டு, கல்லீரல் நன்றாக செயல்பட உதவும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றும்.
மோரில் உள்ள புரதச்சத்து உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். உணவுப்பழக்கத்தை முறையாகப் பின்பற்றாததாலும், நார்ச்சத்துள்ள பொருட்களைச் சாப்பிடாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மோரை தொடர்ந்து குடித்துவர இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும். இதை தினமும் குடித்துவந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
குறைவான உணவைச் சாப்பிட்டு எடையைக் குறைக்க முயலும்போது நீரிழப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். ஆனால் மோர் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படாது. மோர் எளிதில் பசியைத் தணிக்கக்கூடிய உணவு. அதேநேரத்தில் இதில் புரதம், மினரல், வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகளும் உள்ளன. பால், தயிரைவிட இதில் கொழுப்பும் குறைவாகும்.