திருமணத்திற்கு செக் வைத்த வாட்ஸ்அப்: பெண்வீட்டார் அதிர்ச்சியில்!

தற்போது உலகமெங்கிலும், செல்போன்களின் மோகம், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகமாகி வரும் நிலையில், ஆண்களை விட பெண்கள் தான் நேரத்தை போனிலே செலவிட தொடங்கிவிட்டனர். அதுவும் மொபைல் டேட்டாக்கள் குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்தபின் எந்நேரமும் ஆன்லைனிலே இருக்கும் பழக்கம் வந்துவிட்டது.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் மெகந்தி என்பவரது மகளுக்கும், ஹைதர் என்பவரது மகனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் நடைபெறும் தினத்தன்று மணப்பந்தலில் மணப்பெண் அமர்ந்திருந்தார். திருமண மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்களுக்காக பெண் வீட்டார் அனைவரும் காத்திருந்தனர். மாப்பிள்ளை வராததால் மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏன் மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை என அனைவரும் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

பெண்ணின் தந்தை மெகந்தி, மாப்பிள்ளையின் தந்தையை தொடர்புகொண்டு ஏன் இன்னும் வரவில்லை என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஹைதர், இந்த திருமணத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். என்ன காரணம் என்று கேட்டதற்கு மணப்பெண் அதிக நேரம் வாட்ஸ் அப்பிலேயே மூழ்கி இருப்பதால் தங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறினார். அதனை கேட்ட பெண் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதைத்தொடர்ந்து, வரதட்சனையாக மாப்பிள்ளை வீட்டார் ரூ.65 லட்சம் கேட்டார்கள், அதை மனதில் வைத்தே இப்போது திருமணத்தை நிறுத்தியுள்ளனர் என மெகந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் மாப்பிளை தரப்பில், திருமணத்திற்கு முன்பாகவே எங்களது உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அவர் பல்வேறு செய்திகளை அனுப்பியுள்ளார். மணப்பெண் வாட்ஸ் அப்க்கு அடிமை ஆனது போல் இருந்ததால் நாங்கள் திருமணத்தை நிறுத்திவிட்டோம் என தெரிவித்தனர். வாட்ஸ் அப்பினால் திருமணம் நின்று போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.