தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த அழகுதுரை என்பவரது மனைவி ஜெயமணி. கடந்த சில நாட்களாக இவரது குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்த நிலையில், நேற்று ஜெயமணி தன் இரண்டு குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
அழகுதுரை காவல்துறையில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருவதால், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
அப்போது இறந்த ஜெயமணி மற்றும் அவரது குழந்தைகளின் உடல்கள் கம்பத்தைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஜெயமணியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் டிரைவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தற்போது ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிவா கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் ஆம்புலன்ஸ் லைசன்ஸ் ரத்து செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரு உயிர்கள் பறிபோன நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவர் இப்படியொரு காரியத்தை அரங்கேற்றி இருப்பது அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.