தவிக்கும் தமிழக மக்கள்.!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதன் மீது பல்வேறு வரிகள் போடப்படுவதால் பெட்ரோல் டீசல் விலை பல மடங்கு உயர்ந்து கொண்டேவருகிறது.

ஆனால், நம்மை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கூட குறைவான விலையில் எரிபொருள் விற்பனையாகிறது. ஏன் கடந்த வாரம் ஆர்.டி.ஐ., மூலம் வெளியான தகவலில், 15 நாடுகளுக்கு இந்தியா வெறும் 34 ரூபாயில் பெட்ரோலும், 29 ரூபாயுக்கு டீசலும் ஏற்றுமதி செய்கிறதாம்.

நமக்கு தான் மத்திய, மாநில அரசுகள் வரி விதித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 83 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்ரோல் விலை ரூ.83.54 ஆக விற்பனையாகிறது. டீசல் விலையும் ரூ.76.64 ஆகவும் விற்பனையாகிறது.

இதன் காரணமாக அத்தியாசியா பொருள்களின் விலை பலமடங்கு உயரும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதில் எல்லளவு சந்தேகமில்லை. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுபடுத்தகோரி காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் பந்த் அறிவித்தது. இன்று (செப்.,10 ஆம் தேதி) நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த போராட்டத்தில், அகில இந்திய அளவில் சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்து, பங்கு கொள்கின்றன. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முழு அடைப்பில் பங்கேற்கவில்லை, இருப்பினும் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்தபடி நடைபெற்றுவருகிறது.

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் இணைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளது. மேலும் அம்மாநிலத்தில், இடதுசாரிகளும் தனியாக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் திமுக, பாமக உள்ளிட்ட 16 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் வணிக சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் இயங்காது என தமிழ்நாடு ஆட்டோ சங்கம் அறிவித்துள்ளது.

இந்த முழு அடைப்பு குறித்து புதுச்சேரி மாநில முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், நாளை தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார். நாளை அம்மாநிலத்தில் முழு அடைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் முழு அடைப்பு போராட்டம் மாலை 3 மணி வரை நடக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளதால் நாடு முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த முழு அடைப்பு காரணமாக கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் தமிழக எல்லைகளான ஓசூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசுப்பேருந்துகளும் அம்மாநில எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் – கேரளாவுக்கு இடையேயான பேருந்து சேவைகளும் இரு மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் பேருந்து சேவை தொடங்க மாலை 3 மணி ஆகும் என்பதால் மாநில எல்லையில் பயணிகள் காத்துகொண்டு இருக்கின்றனர்.