சமைக்கும்போது செய்யும் தவறுகள்!

சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில் காண்பிக்கும் ஆர்வத்தை அவைகளை சமைக்கும் பக்குவத்திலும் வெளிப்படுத்த வேண்டும். சமைக்கும் உணவு எவ்வளவு ருசியானதாக இருந்தாலும் அது சரியான முறையில் சமைக்கப்படாவிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்காது. உணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள் குறித்து பார்ப்போம்!
* உணவை சமைக்கும் பாத்திரங்கள் தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும். நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தவே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அதில் டெப்லான், பெர்பிளுரோ ஆக்டனோயிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருக்கின்றன. தொடர்ந்து நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தி சமைக்கும்போது கல்லீரல் பாதிப்புக்குள்ளாவதற்கு வாய்ப்பிருக்கிறது. இரும்பு, பீங்கான், கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்துவது உடலுக்கு நலம் சேர்க்கும்.
* காய்கறிகளை வேக வைப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துகொள்ளக்கூடாது. அதிலிருக்கும் நீர்ச்சத்து விரயமாகி ஊட்டச்சத்துக்கள் வீணாகிபோய்விடும். காய்கறிகளை மிதமான சூட்டில் சூப்பாக தயாரித்து குடிப்பது நல்லது.
* ஒருசில காய்கறிகளின் தோல் பகுதியில்அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கும். குறிப்பாக உருளைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், வெள்ளரிக்காய், ஆப்பிள் ஆகியவற்றின் தோல் பகுதியில் நிறைய வைட்டமின்கள், கூடுதல் கனிமங்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் தோல் பகுதியில் இருக்கும் நார்சத்து, செரிமானம் சீராக நடைபெற உதவி புரியும்.
* தேன் இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. அதை சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது. சூடுபடுத்தினால் அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் வீணாகிவிடும். எதிர்மறையான ரசாயன மாற்றமும், கசப்பு தன்மையும் தோன்றும்.
* சமையல் எண்ணெய் வகைகளை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்திவிடக்கூடாது. ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவைகளை புகை வெளியேறும் அளவுக்கு சூடாக்கினால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிந்துபோய்விடும்.
* வறுத்து சாப்பிடும் உணவுகள் ருசியாக இருக்கலாம். ஆனால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவைகளில் கொழுப்பு அழையா விருந்தாளியாக சேர்ந்திருக்கும். இதன் மூலம் நீரிழிவு மற்றும் இதயநோய் பாதிப்புகள் உருவாகும்.