தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் எம்காம் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவரை விக்னேஷ் காதலித்துவந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த வாரம் 2 ஆம் தேதி கல்லணை கால்வாய் பகுதியில் நின்று பேசிகொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. திடீரென விக்னேஷ் கன்னத்தில் அறைந்த ஜெயஸ்ரீ, திடீரென கல்லனை கால்வாயில் குதித்து தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் காதலியை காப்பாற்ற அவரும் ஆற்றில் குதித்தார். அவரும் தண்ணீரில் நீந்த முடியாமல் தத்தளித்தார். இதனை பார்த்த மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் விக்னேசை மீட்டனர். ஆனால் ஜெயஸ்ரீயை அவர்களால் மீட்க முடியவில்லை.
விக்னேஷ் காதலியின் செல்போனை வாங்கி பார்த்தபோது, அதில் பெயர் குறிப்பிடாமல் செல்போன் எண் இருந்தது. இந்த எண் யாருடையது என்று கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்காக கோவத்தில் திடீரென்று தன்னை அறைந்துவிட்டு கால்வாயில் குதித்துவிட்டதாக விக்னேஷ் கூறியுள்ளார்.
இதையடுத்து 2 நாட்கள் கழித்து ஜெயஸ்ரீயின் உடல் தஞ்சை ஆற்று பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியின் இழப்பை தாங்கமுடியாத விக்னேஷ் மனமுடைந்து காதலி தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கே சென்று அவரும் தற்கொலை செய்து கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.