ஓவியாவின் இலங்கை வருகை; தடுமாறும் ஈழத்து தமிழ் இளைஞர்கள்: எங்கே செல்கிறது தமிழினம்! நடராசா ஜெயகாந்தன்.
இலங்கையில் கடந்த காலங்களில் தமிழர்கள் பல ஒடுக்குமுறைகளை சந்தித்த வேளையில் அந்த காலப்பகுதியில் இலங்கையில் தமிழ் மக்களுக்காக, பல தமிழ் இயக்கங்கள் தோற்றம் பெற்றிருந்தது, அந்த இயக்கங்களில் தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவுகளையும் பெற்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் 35 வருடங்களாக தனி நாட்டு கோரிக்கையை முன்னெடுத்திருந்த நிலையில் எந்த தீர்வும் பெற முடியாத சூழ்நிலையில், ஈழத்து தமிழ் மக்களின் பிரட்ச்சனைகளை உலகிற்கு அறியவைத்து ஜக்கிய நாடுகள் சபையின் முற்றத்திற்கு கொண்டு சென்ற நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் பல உயிரிழப்புகளுக்கு பின்னர் மௌனிக்கப்பட்டது.
இந்நிலையில் போராட்டம் முடிந்து கடந்த 9 வருடங்களாகியும் தமிழர்கள் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முடியாத சூழலில் வறுமையின் கீழ் நிலையற்ற தமிழ் அரசியல் வாதிகளின் தீபாவளி தீர்வு பேச்சை நம்பி நகர்ந்து கொண்டிருக்கின்றார்.
தற்போதுதான் தமிழ் இளைஞர்கள் நிதானமாகவும், தமிழர்களின் தீர்வுக்கு அகிம்சை ரீதியில் போராட வேண்டிய சூழலில் இருக்கின்றார்கள்.
ஆனால் இன்றைய நிலை அப்படியா இருக்கின்றது? இளைஞர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? எதை நோக்கி நகர்கின்றனர்? என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் கிடைக்கும் பதில் அதிர்ச்சிகரமாகவே உள்ளன.
ஆம் இலங்கையில் உள்ள தமிழ் இளைஞர்களின் செயற்பாடு ஒரு சுதந்திரம் பெற்ற நாட்டு இளைஞர்களின் நவ நாகரீக செயற்பாடுகளையும் மிஞ்சிய நிலையில் காணப்படுகின்றது என்றால் மிகையல்ல, முக்கியமாக மது பழக்கம், வாள்வெட்டு கலாச்சாரம் என்று சீரழிந்து செல்கிறார்கள் வடக்கு உட்பட்ட இலங்கையிலுள்ள தமிழ் இளைஞர்கள்.
இந்த நிலையில், மது, வாள்வெட்டு கலாச்சாரங்களில் இருந்து தமிழ் இளைஞர்களை எப்படி மீட்பது என்று தமிழ் சமூக ஆர்வலர்கள் போராடி வரும் நிலையில், நேற்று நடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகை ஓவியா நேற்றைய (10.09.2018) தினம் இலங்கைக்கு (கொழும்பு) நகைக்கடை ஒன்றை திறந்து வைப்பதற்காக வந்துள்ளார்.
அந்த வகையில், நேற்று காலை செட்டியார் தெருவுக்கு வந்த ஓவியாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன், பெரும் திரளான ரசிகர்கள் (தமிழ் இளைஞர்கள்) கொழும்புக்கு சென்று செல்பி எடுக்க முண்டியடித்தது ஈழத்தில் வாழும் தமிழர்கள், மற்றும் புலம்பெயர் ஈழத்தமிழர்களை முகஞ்சுழிக்க வைத்துள்ளது.
ஒரு நடிகருக்கோ அல்லது வேறு துறையிலிருக்கும் பிரபலங்களுக்கோ ரசிகர்களாக இருப்பது தவறு இல்லை ஆனால் வெறியர்களாக மாறுவது தவறான முன்னுதாரணமாகும், பல வருடங்களாக வடக்கில் பல தமிழ் தாய்மார்கள், பெண்கள் தங்கள் பிள்ளைகளை காணவில்லை, சகோதரர்களை காணவில்லையென போராட்டம் நடத்திவருகின்றனர், அவர்கள் பல முறை அழைத்தும் அவர்கள் போராட்டத்தில் கூடாத கூட்டம், கொழும்பு வந்த ஓவியாவை பார்க்க வடக்கிலிருந்தும் சென்றிருக்கின்றார்கள் என்றால் இளைஞர்களின் மனநிலை எந்தளவுக்கு செல்கின்றது என சிந்திக்க வேண்டும்.
இளைஞர்களே!! நீங்கள்தான் ஒரு நாட்டின், ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வல்லமை உடையவர்கள், நீங்கள் சீரான பாதையில் சென்றால்தான் எமது இனம் தலை நிமிர்ந்து வாழக்கூடிய சூழல் உருவாகும், கட்டாயம் தீர்வுகளை பெற்றே ஆக வேண்டிய சூழலில் நாங்கள் தற்போது இருக்கின்றோம், அற்ப சந்தோசங்களுக்காக உங்கள் எதிர்காலம், தமிழர்களின் நிலையை இழந்து விடாமல் தீர்வை நோக்கிய, தமிழர் விடிவை நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டு எமது இனத்தை ஒன்றிணைந்து மீட்க வேண்டும் என்பதே உரிமையுடனும் ஹௌரவத்துடனும் வாழ விரும்பும் ஈழத்து தமிழர்களின் ஆதங்கம்.