தோல் நீக்கப்பட்ட முழு உளுந்து – 1 கப்
இட்லி அரிசி – 4 கப்
உப்பு – 3 டீ ஸ்பூன்
வெந்தயம் – ½ டீ ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
செய்முறை:
மாவு அரைப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அரிசியையும், உளுந்தையும் தண்ணீரில் ஊற வைக்கவும். உளுந்தையும், அரிசியையும் நன்கு அலசி களைந்து வைத்துக்கொள்ளவும். முதலில் உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்ந்துவிட்டால் உளுந்து சரியாக அரைபடாது. அதே சமயத்தில் தண்ணீர் ரொம்ப குறைவாக இருந்தாலும் அரைப்பதற்கு கடினமாக இருக்கும். எனவே இதற்கு தகுந்தாற்போல் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை பக்கத்தில் வைத்துக்கொண்டு சிறு சிறு இடைவெளிவிட்டு 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு தண்ணீரை அரைக்கும் மாவில் சேர்த்துக் கொண்டே வரவும். மாவு வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக இல்லாமல், கொஞ்சம் தளர்வான மாவாக இருக்கும்படி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். உளுந்து முழுவதும் அரைபட்டு லேசான தரதரப்புடன் இருக்கும் நிலையில் இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து அரிசியையும் இதேபோல் அரைத்துக்கொள்ளவும் . அரிசிமாவையும், உளுந்துமாவையும் ஒன்றாக உப்பு போட்டு கலக்கிவைக்கவும். இதை அப்படியே 8 – 10 மணி நேரம் அறைவெப்பநிலையில் (Room temperature) வைத்திருக்கவும். மாவு புளிக்க ஆரம்பித்து ஆங்காங்கே காற்றுக்குமிழிகள் தோன்றி இருக்கும். இப்போது மாவு பயன்படுத்த தயாராகிவிட்டது.இதை மீண்டும் ஒருமுறை நன்றாக கலக்கிவிட்டு பிரிட்ஜில் வைத்திருந்து தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மாவில் நம் விருப்பத்திற்கு ஏற்ப இட்லி, தோசை,மசால் தோசை, ஊத்தாப்பம், பனியாரம் என வித விதமாக தயாரித்துக் கொள்ளலாம்.
- அரிசி மாவு அரைக்கும்போது ½ டீ ஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் சேர்த்தும் அரைத்துக்கொள்ளலாம். இட்லி, தோசை சாப்ட்டாக வருவதோடு நல்ல வாசனையாகவும் இருக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
- மாவு புளித்துவர ஆகும் நேரம் அவரவர் வாழும் இடத்தின் வெப்பநிலை, மற்றும் வீட்டினுள் இருக்கும் அறை வெப்பநிலையைப் பொருத்தது.
- குளிர்காலத்தில் மாவு விரைவில் புளித்துவர மைக்ரோவேவில் குறைவான வெப்பநிலை செட்டிங்கில் வைத்து 2 நிமிடங்கள் சூடாக்கி கலக்கி வைக்கவும். இது மாவு புளிப்பதற்கு உதவி செய்யும்.
- மாவு அரைக்க தோல் நீக்கிய முழு உளுந்தை பயன்படுத்த மிருதுவான இட்லிகள் கிடைக்கும். முழுஉளுந்து கிடைக்காத நிலையில் உடைத்த உளுந்தை(split urad dal)பயன்படுத்தி செய்யலாம்