கடன்சுமையால் சிக்கித் தவிக்கும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நுண் நிதிக் கடன்களை வழங்கிவரும் வங்கிகளின் பணியாளர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி ஹுவான் பெப்லோ கடும் கவலை வெளியிட்டார்.
தற்கொலைகளுக்கும் வழி வகுத்துள்ள நுண்நிதிக் கடன்களை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கைச் சேர்ந்த பெண்கள் உட்பட பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில்இ சில கடன்களை இரத்துச் செயவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.
எனினும் சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளால் நுண் நிதிக் கடன் பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் முகம்கொடுத்துவரும் நெருக்கடிகளுக்கு முழமையான தீர்வு கிடைக்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி பெப்லோ சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவிற்கு ஒன்பது நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த, வெளிநாட்டு கடன்களால் மனித உரிமைகளுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஹுவான் பெப்லோ பொஹோஸ்லவ்ஸ்கி, தனது பயணத்தின் இறுதி நாளான இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
அந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வங்கிககள் உட்பட நிதி நிறுவனங்களுக்கு பாரிய இலாபத்தை ஈட்டித்தரும், குறிப்பாக 220 வீத வட்டி வரை அறவிடப்படும் நுண் நிதிக் கடன்களை மீள செலுத்த முடியாத வட பகுதி பெண்கள், தமது உடம்மை விற்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஹுவான் பெப்லோ பொஹோஸ்லவ்ஸ்கி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனால் நுண் நிதிக் கடன்களை வழங்கும் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நுண்நிதிக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை கட்டுப்பட வைக்கும் வகையில் கடுமையான சட்டங்களை சிறிலங்கா அரசு இயற்றி நடைமுறைப்படுத்தும் வரை, பாதிக்கப்பட்டுள்ளவர்களை கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது கடன்களை மீள செலுத்துவதை நிறுத்தி வைக்க சிறிலங்கா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா வின் சிறப்புப் பிரதிநிதி அறிவுறுத்தியுள்ளார்.