ஒருவரை மின்சாரம் தாக்கினால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

அறிவியல் வளர்ச்சி விண்ணை தொடும் அளவிற்கு வளர்ந்தாலும் இன்னும் சில பிரச்சினைகளுக்கு விஞ்ஞான வளர்ச்சியால் தீர்வு கண்டறிய இயலவில்லை. அதில் ஒன்றுதான் மின்சாரம் தாக்குவது. ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 5000 இந்தியர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கு மின்சாரம் தாக்கிய ஒருவரை எப்படி காப்பாற்றுவது, என்ன முதலுதவிகள் செய்வது போன்ற விழிப்புணர்வு இல்லாததுதான். மின்சாரம் தாக்கியதும் தேவையான முதலுதவிகளை செய்தாலே பாதி உயிர் இழப்புகளை குறைத்துவிடலாம். இந்த பதிவில் மின்சாரம் தாக்கியவுடன் செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னவென்பதை பார்க்கலாம்.

எப்போது மரணம் நிகழும்?

மின்சாரம் தாக்கிய ஒருவருக்கு மரணம் ஏற்பட நான்கு காரணங்கள் உள்ளது. எவ்வளவு வோல்ட் மின்சாரம் தாக்கியது, எதன் வழியாக மின்சாரம் தாக்கியது, மின்சாரம் தாக்கியவரின் ஆரோக்கியம் மற்றும் எவ்வளவு விரைவாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நான்கு காரணங்கள்தான் மின்சாரம் தாக்கியவரின் ஒருவரின் மரணத்தை நிர்ணயிக்கிறது.

எப்போது மருத்துவரை அழைக்க வேண்டும்?

மின்சாரம் தாக்கியவுடன் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக மாரடைப்பு, இதய துடிப்பு தொடர்பான பிரச்சினைகள், சுவாசிக்க சிரமப்படுதல், தசைகளில் வலி, உணர்வின்மை அதாவது உடல் மரத்து போதல் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் தூக்கி செல்லுங்கள். இதில் ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். தாமதம் ஏற்பட்டால் மரணம் மட்டுமே நிகழும். மருத்துவ உதவி கிடைப்பதற்குள் உங்களால் இயன்ற முதலுதவிகளை செய்யுங்கள்.

பாதுகாப்பு நடவடிக்கை

முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவர்களை மின்சாரம் தாக்கியவர்களை உடனடியாக தொடக்கூடாது. அவர் இன்னும் மின்சாரத்துடன் தொடர்பில் உள்ளாரா என்பதை உறுதிசெய்து கொண்டு பின்னர் நேரடியாக தொடாமல் ஏதேனும் கட்டையின் உதவியுடன் அவரை தொடுங்கள். ஏனெனில் அவர் மின்சாரத்தால் தாக்கப்படும்போது நீங்கள் அவரை தொட்டால் அது உங்களையும் பாதிக்கும்.

மின்சாரத்தை துண்டியுங்கள்

உடனடியாக மின்சாரத்தை துண்டியுங்கள். ஒருவேளை முடியவில்லை என்றால் பாதிக்கப்பட்டவரை அங்கிருந்து உடனடியாக நகர்த்துங்கள். உங்கள் கைகளிலோ, கால்களிலோ ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக மின்சாரத்தை கடத்தாத பிளாஸ்டிக், மரம் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.

சிபிஆர்

மின்சாரத்திலிருந்து மீட்டவுடன் அவர்களின் உடலில் அசைவுகள் அல்லது இயக்கங்கள் இருக்கிறதா என்று பாருங்கள். இயக்கங்கள் என்றால் மூச்சு விடுதல், இதய துடிப்பு, போன்றவை. எதுவும் இல்லையெனில் உடனடியாக கார்டியோ பல்மோனரி ரெசஷ்டியேஷன் (CPR) செய்யுங்கள். அதாவது மார்பு பகுதியில் நன்கு குத்துங்கள்.

படுக்க வையுங்கள்

அதிர்ச்சியடையாமல் இருங்கள். மின்சாரம் தாக்கியவரை படுக்க வையுங்கள், குறிப்பாக கால்களின் உயரத்தை விட தலையின் உயரம் கீழே இருக்கும்படி படுக்க வையுங்கள். கால்களை நன்கு விரித்து படுக்க வைக்க வேண்டியது அவசியம். இது அவர்களின் இரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். இயக்கங்கள் உண்டாக இது நல்ல வழி.

முன்னெச்சரிக்கைகள்

மின்சாரம் துண்டிக்கப்படும் வரை அதிக மின்சாரம் பாயும் வயர்களின் அருகே செல்லாமல் இருப்பது நல்லது. குறைந்தது 20 அடி தூரம் தள்ளி நிற்கவும். வயரில் இருந்து நெருப்பு பொறிகளோ அல்லது சத்தமோ வந்தால் அதன் அருகில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

காயங்கள்

மின்சாரம் தாக்கியதில் ஏதேனும் காயம் படாதவரை அவர்களை உடனடியாக நகர்த்தாதீர்கள். ஏனெனில் அவர்களின் உடல் உடனடி இயக்கங்களுக்கு தயாராக இருக்காது. அவ்வாறு உடனடியாக நகர்த்தும்போது அவர்களின் பாதிப்பு இருமடங்காக உயரும். அதேநேரம் காயம் இருந்தால் அதற்கு உடனடி முதலுதவி செய்ய வேண்டியது அவசியம்.

மின்சாரம் தாக்கும் இடம்

மின்சாரம் தாக்கும் இடத்தை பொறுத்து அதன் பாதிப்புகள் அதிகமாய் இருக்கும். குறிப்பாக சமயலறையில் மின்சாரம் தாக்க நேர்ந்தால் அருகில் உள்ள தண்ணீர் இருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த சூழ்நிலையில் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து விட்டு பாதிக்கப்பட்டவரை அங்கிருந்து அப்புறப்படுத்தவும்.

மூச்சு திணறல்

மின்சாரம் தாக்கியவரகளுக்கு ஏற்படும் முதல் பிரச்சினை மூச்சுத்திணறல். ஏனெனில் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால் அவர்களுக்கு சுவாசிப்பது கடினமாக இருக்கலாம். எனவே உடனடியாக ஜன்னல், கதவுகளை திறந்து வைக்கவும், அப்படியும் சரியாகவில்லை என்றால் வாயோடு வை வைத்து ஊதவும். ஒருவேளை எந்த பாதிப்பும் இல்லையென்றாலும் மருத்துவரிடம் சென்று சோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.