யாழில் கடத்தப்பட்ட பொலிஸ் வாகனத்துக்கு நேர்ந்த கதி!

கொடிகாமம் பொலிஸாரின் வாகனமொன்றை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் கொடிகாமம் பாலாவிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..

மேற்படி பாலாவிப் பகுதியில் தொடர்ச்சியாக மணல் கடத்தல் இடம்பெற்று வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அங்கு பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு அங்கு பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பொலிஸாரின் வாகனத்தை இனந்தெரியாதோர் கடத்திச் சென்றுள்ளனர். குறித்த வாகனத்திற்குள் பொலிஸாரின் ஆயுதங்களும் காணப்பட்டதாகவும் அந்த வாகனத்துடன் நின்ற பொலிஸாரைத் தாக்கிவிட்டே வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஆயுதங்களுடன் கடத்திச் செல்லப்பட்ட வாகனத்தை பொலிஸார் தேடுதல் வேட்டை நடாத்தினர். ஆந்தப் பகுதி முழுவதும் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு நடத்திய தேடுதலால் சில மணி நேரம் அங்கு பெரும் பதற்றமே ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு அப் பகுதி முழுவதும் நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் கொடிகாமம் ஆலடிப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை எடுத்துச் சென்றவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.