இந்தியாவுடனான கடந்தகால புரிந்துணர்வின்மைகளை மறந்து விடுவதற்கு தயார் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2019 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு தலைமை தாங்குவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடியவர்கள் பட்டியலில் எனது சகோதரரும் உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து நாளிதழிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
பேட்டியின் முழுமையான தமிழாக்கம் வீரகேசரி இணையம்
கேள்வி- இந்தியாவுடன் உங்களுக்கு நெருக்கடியான உறவுகள் காணப்பட்டன இந்த விஜயத்தை மோடி அரசாங்கத்துடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள நல்லிணக்கம் என கருத முடியுமா?
மகிந்த- 2015 தேர்தலிற்கு முன்னதாக புரிந்துணர்வின்மை நிலவியது,ஆனால் தற்போது முன்னோக்கி நகர்வதற்கான நேரம் என நான் கருதுகின்றேன்.
கேள்வி- 2015 மார்ச் மாதம் இந்துவிற்கு வழங்கிய பேட்டியில் நீங்கள் ரோ அமைப்பு எதிர்கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்தது என நீங்கள் குற்றம்சாட்டியிருந்தீர்கள்.சில வாரங்களிற்கு முன்னர் இந்தியா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என தெரிவித்திருந்தீர்கள். இது குறித்து கவலை இன்னமும் உங்களிடம் உள்ளதா ?
மகிந்த: இந்தியா மாத்திரமல்ல. நான் இந்தியாவை மாத்திரம் குறிப்பிடவில்லை.நாடொன்றின் தேர்தலில் எவரும் தலையிடக்கூடாது என்றே நான் தெரிவித்தேன்.
மக்கள் யாரை அதிகாரத்திற்கு கொண்டுவரவிரும்புகின்றார்கள் என்பது நாடொன்றின் உள்விவகாரம்.அதுவே எனது மனதில் இருந்தது.
தற்போது அவர்கள் அனைவரும் அந்த நேரத்தில் என்ன தவறு நடந்தது தாங்கள் என்ன செய்தோம் என்பதை உணர்ந்துள்ளார்கள் என நான் கருதுகின்றேன்.இதன் காரணமாக கடந்த காலங்களை நாங்கள் மறக்கவேண்டும்.இது முன்னோக்கி நகர்வதற்கான தருணம்
கேள்வி- உங்கள் கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக சீனநிறுவனத்திடமிருந்து பணம் பெற்றது என்ற குற்றச்சாட்டு குறித்து என்ன தெரிவிக்கவிரும்புகின்றீர்கள்?
மகிந்த- அவர்கள் எனக்கு நிதி வழங்கவில்லை.மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு என்மீது குற்றம்சாட்டுவதற்கு ஏனைய விடயங்கள் இல்லாததால் இது குறித்து மாத்திரமே அவர்கள் பேசுகின்றனர்.
அவர்கள் ஆட்சிக்கு வந்தவேளை என்னுடைய 18 மில்லியன் டொலர்களை தேடினார்கள். அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் ஆதரவளித்த போதிலும் இன்னமும் அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்( சிரிக்கின்றார்)
அவர்களால் ஒரு டொலரை கூட கண்டுபிடிக்கமுடியவில்லை.
கேள்வி- அனைவரினது கவனமும் சீனாவின் கடன் குறித்தே உள்ளது. உங்களுடைய அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுக திட்டங்களை சற்று வித்தியாசமாக செய்திருக்க முடியும் என கருதுகின்றீர்களா?
மகிந்த- நாங்கள் வேண்டிய கடன்களை பாருங்கள் இலங்கையால் அதனை திருப்பி செலுத்தியிருக்க முடியும்;. ஆனால் தற்போதைய அரசாங்கம் அனைத்தையும் குழப்பிவிட்டது.
கொழும்பு துறைமுக திட்டத்திற்கு நாங்கள் எதனையும் செலுத்தவேண்டிய அவசியமில்லை. அது குத்தகை ஒப்பந்தம்
அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் ஆரம்பிக்கப்பட்டவேளை நாங்கள் அமெரிக்காவிடமிருந்து பெற்ற கடனை விட சீனாவிடமிருந்து பெற்ற கடன் குறைவாகவே காணப்பட்டது.
ஆகவே பிரச்சினை தற்போது தீவிரமாகியுள்ளது என்றால் அரசாங்கம் அதனை முறையாக கையாளவில்லைஎன்பதே அர்த்தம்; இதற்காக எப்படி எங்கள் மீது குற்றம் சொல்ல முடியும்
கேள்வி இந்திய இலங்கை உறவுகள் குறித்த உங்கள் கருத்து என்ன?அவ்வேளை நிலவிய புரிந்துணர்வின்மைக்கு இதுவே காரணமாக உள்ளது?
மகிந்த- இந்தியாவே எங்களது நெருக்கமான உறவு, எங்கள் அயல்நாடு என நான் தெரிவிப்பேன்.அதேவேளை சீனா நீண்ட கால நண்பனாகவும் உள்ளது.சீனாவுடான எங்கள் நடவடிக்கைகளின் போது நாங்கள் இந்தியாவை மறப்பதில்லை.எங்கள் அயல்நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக இலங்கையை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை நாங்கள் எப்போதும் தெரிவித்துள்ளோம்.
கேள்வி- கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் நீர்மூழ்கி தரித்து நின்றதே அவ்வேளை இந்தியாவின் முக்கிய கரிசனைக்குரிய விடயமாக காணப்பட்டதே?
மகிந்த – நீர்மூழ்கி ஆபிரிக்காவிற்கும் வளைகுடாவிற்குமான வழமையான பயணத்தை முன்னெடுத்திருந்தது.அவ்வேளை அவர்கள் சிறிது நேரம் இலங்கையில் நின்றனர். இதுவே நடந்தது. இந்தியா அவ்வேளை இதனை தனது நடவடிக்கைகளிற்கு சாதகமாக பயன்படுத்தியது என நான் கருதுகின்றேன்.
கேள்வி- உறவுகள் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்ன?
மகிந்த- புரிந்துணர்வின்மை,எனது நாட்டை அபிவிருத்தி செய்வதே எனது முன்னுரிமைக்குரிய விடயம்,நான் எப்போதும் எங்கள் நடவடிக்கைகள் குறித்து இந்தியாவிற்கு தெரியப்படுத்தியுள்ளேன்.துறைமுகத்தை விமானநிலையத்தை பெருந்தெருக்களை அமைக்குமாறு அவர்களையே கேட்டேன்
நீங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றீர்கள் ஆனால் உங்கள் கட்சி மத்தல விமானநிலையத்தின் நடவடிக்கைகளை இந்தியாவிற்கு வழங்குவதை சமீபத்தில் எதிர்த்துள்ளதே?
பதில்-நான் இந்தியாவை எதிர்க்கவில்லை,நான் சிறிசேன அரசாங்கத்தின் தனியார் மயமாக்கும் கொள்கையே எதிர்க்கின்றேன்.
கேள்வி- இந்திய இலங்கை உறவுகள் தற்போது எந்த நிலையில் உள்ளன? இலங்கை அரசதலைவர்கள் சிறப்பான உறவுகள் காணப்படுவதாக தெரிவிக்கின்ற போதிலும் பல உடன்படிக்கைகள் இன்னமும் கைச்சாத்திடப்படாத நிலையிலேயே காணப்படுகின்றனவே?
மகிந்த ராஜபக்ச- அவர்கள் சிறந்த உறவு காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்,முன்னரை விட சிறந்த உறவு காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.இது எங்கள் பக்கத்திலிருந்து வரும் கருத்தே.நான் வெளிநாட்டில் வைத்து எனது அரசாங்கத்தை விமர்சிக்கவில்லை.அவர்களின் சந்திப்புகள் அனைத்தையும் நான் பாராட்டுகின்றேன், ஆனால் எந்த முதலீடும் இலங்கைக்கு கிடைக்கவில்லை.அரசாங்கம் ஸ்திரமற்றதாக காணப்படுகின்றது, இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கையில் ஸ்திரமான அரசாங்கம் காணப்படுவது அவசியம். பலவீனமான அரசாங்கத்தினால் அதனை வழங்கமுடியாது.
கேள்வி- உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியா குறித்த உங்கள் முதல் முன்னுரிமை என்னவாக காணப்படும்?
மகிந்த-எங்கள் முதல்முன்னுரிமை முதலீடே.மற்றும் சிறந்த தொடர்பாடல்கள்.விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் போது டிரொய்கா என்ற கட்டமைப்பு காணப்பட்டது.அதன் மூலம் நள்ளிரவில் கூட முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம்.பொருளாதார நோக்கங்களிற்காக நாங்கள் அவ்வாறான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
கேள்வி- நம்பிக்கையில்லா பிரேரணை போன்றவற்றின் மத்தியிலும் இலங்கையின் இரு பிரதான கட்சிகளும் தொடர்ந்தும் இணைந்திருக்கின்றனவே அவர்கள் தேர்தல்கள் இணைந்து போட்டியிடுவார்கள் என கருதுகின்றீர்களா?
மகிந்த – எனக்கு இது குறித்து சந்தேகங்கள் உள்ளன.
கேள்வி- நீங்கள் சிறிசேனவுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாரா?
மகிந்த- துரதிஸ்டவசமாக சிறிசேன என்னுடன் இணைந்து செயற்பட தயாரில்லை.நாங்கள் புதிய கட்சியை உருவாக்கியுள்ளோம். ஜிஎல் பீரிஸ் அதன் தலைவர்.
எங்களிற்கு 45 வீத ஆதரவு உள்ளதால் சிறிசேனவிற்கு எங்கள் ஆதரவு அவசியம்
கேள்வி- 2015 இல் எதிர்கட்சிகள் மாத்திரம் உங்களிற்கு எதிராக அணிதிரளவில்லை.உங்கள் அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மக்கள் முஸ்லீம் சிறுபான்மை இனத்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர்.அவர்கள் உங்களிற்கு மீண்டும் வாக்களிப்பார்கள் என நீங்கள் கருதுகின்றீர்களா?
மகிந்தராஜபக்ச- இந்த அரசாங்கம் செய்த தவறுகளை அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் என நான் கருதுகின்றேன். 2014 இல் இடம்பெற்ற முஸ்லீம்களிற்கு எதிரான வன்முறைக்கு காரணமான அமைச்சர் தற்போது அரசாங்கத்தில் உள்ளார்.
நாங்கள் அரசாங்கத்தில் இருந்தவேளை அவ்வேளை அழிக்கப்பட்ட வீடுகளை மீளகட்டிக்கொடுத்தோம்.
ஆனால் இந்த வருடம் கண்டி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.
கண்டி வன்முறைகள் ஆரம்பமானவேளை நான் அந்த பகுதிக்கு உடனடியாக சென்று அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களின் கூட்டத்தை கூட்டினேன். பிரதமரும் ஜனாதிபதியும் பின்னரே வந்தனர்
கேள்வி- நீங்கள் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உணராத சிங்கள பௌத்த பலம்பொருந்திய பெரும்பான்மையை பிரதிநிதித்துவம் செய்கின்றீர்கள் என்ற கருத்து காணப்படுகின்றதே?
மகிந்த- 2018 உள்ளுராட்சி தேர்தலில் நாங்கள் 72 வீத வாக்குகளை பெற்றோம்.ஆகவே அனேகமக்கள் எங்களுடன் உள்ளனர் என நான் கருதுகின்றேன்.இது எங்கள் எதிராளிகள் பரப்பும் பொய்.மக்கள் மத்தியில் இவ்வாறான உணர்வு இல்லை என நான் கருதுகின்றேன்
கேள்வி- விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் உங்கள் பங்களிப்பு என்ன,? மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றனவே?பத்திரிகையாளர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் நீங்கள் சமீபத்தில் விசாரிக்கப்பட்டீர்கள்? இந்த விடயங்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
மகிந்த ராஜபக்ச -இவைகள் பிரச்சினைகளாகயிருக்கும் என நான் கருதவில்லை.இந்த குற்றச்சாட்டுகள் என்னை துன்புறுத்துவதற்கானவை என்பது மக்களிற்கு தெரியும்.ஏனென்றால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் எதிரானவை மாத்திரமே.
முன்னர் என்னுடைய அரசாங்கத்திலிருந்த தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருப்பவர்கள் குறித்து ஏன் குற்றச்சாட்டுகள் இல்லை?
இந்த வழக்குகளில் காணப்படும் ஆதாரங்கள் வலுவற்றவை இன்றுவரை நிருபிக்கப்படாதவை.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளை பொறுத்தவரை அவர்கள் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கட்டும் எனக்கு மறைப்பதற்கு எதுவுமில்லை.
பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளை நாங்கள் எங்களிற்காக மாத்திரம் தோற்கடிக்கவில்லை,ஒரு சமூகத்திற்காக ஒரு நாட்டிற்காக மாத்திரம் நாங்கள் அவர்களை தோற்கடிக்கவில்லை.
அவர்கள் ராஜீவ்காந்தியை கொலை செய்தார்கள் வேறு நாடுகளில் ஏனைய பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டனர். உலகிற்கு அவர்கள் தற்கொலை அங்கிகளை அறிமுகப்படுத்தினர்,இதன் காரணமாக அவர்களை தோற்கடித்ததன் மூலம் பல நாடுகளிற்கு உதவியுள்ளோம்
கேள்வி- ராஜீவ்காந்தி கொலைக்காக தண்டிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு அரசாங்கம் விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது. இது குறித்த உங்கள கருத்து என்ன?
மகிந்த- இது குறித்து எந்த கருத்தும் இல்லை.இது அரசாங்கத்தை பொறுத்தவிடயம்,இது இந்தியாவின் உள்விவகாரம், இது இலங்கையாகயிருந்தால் நாங்கள் வேறு நிலைப்பாட்டை எடுத்திருப்போம். இந்திய விடயம் குறித்து நான் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்?
கேள்வி- நீங்கள் 2019 தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு தலைமை தாங்குவீர்களா? 19 வது திருத்தம் இரண்டு தடவைக்கு மேல் போட்டியிடுவதற்கு தடை விதித்துள்ளதே?
மகிந்த- நான் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு தலைமை தாங்குவேன்,அரசமைப்பு திருத்தம் அவ்வாறு தெரிவிக்கின்ற போதிலும் நான் போட்டியிடலாம் என்ற கருத்து காணப்படுகின்றது.நீதிமன்றத்தில் இதனை எதிர்கொள்ளவேண்டும்.
ஆனால் நான் அந்த ஆபத்தை எதிர்கொள்ளவேண்டுமா என்பது குறித்து சிந்திக்கவேண்டும்,
அனைவரும் ஏற்கத்தக்க மற்றொரு வேட்பாளரை நியமிப்பதே இன்னொரு சாத்தியப்பாடாகும்.
கேள்வி- அவ்வாறு நியமிக்கப்படுபவர் உங்கள்குடும்பத்தை சேர்ந்தவராகயிருப்பாரா அல்லது வெளியிலிருந்து யாரையாவது நியமிப்பீர்களா?
மகிந்த ராஜபக்ச- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதை 35 ஆக உயர்த்தியுள்ளதால் எனது மகன் தேர்தலில் போட்டியிட முடியாது ,எனது சகோதரர் நிச்சயமாக போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.
ஆனால் கட்சியும் கூட்டணியும் யாரை நியமிப்பது என்பதை தீர்மானிக்கவேண்டும்.