விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது கையாண்ட பொறிமுறையை, எதிர்வரும் காலத்தில் தமது கட்சி ஆட்சி அமைத்தால் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியிலும் கையாளவிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இந்த கருத்தைக் கூறியுள்ளார். 2015ம் ஆண்டு தமிழ் பேசும் மக்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமை தவறு என்பதை தற்போது உணர்ந்து விட்டார்கள்.
ஆகவே அவர்கள் இப்போது எமக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கின்றனர். 2014ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமான ஒரு அமைச்சர், இப்போதைய அரசாங்கத்திலும் அமைச்சராகவே இருக்கிறார். 2018ம் ஆண்டு கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற வேளையில், அதனைத் தடுக்க இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அதேநேரம் 2019ல் தமது அரசாங்கம் உருவாகுமாக இருந்தால், முதலீடுகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தொடர்பாடலுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற போது ட்ரொய்க்கா என்ற பொறிமுறையை அரசாங்கம் பின்பற்றியது.
இரண்டு தரப்புக்களில் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அந்த குழு எந்த தருணத்திலும் முக்கியமான விடயங்கள் சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் அந்த பொறிமுறை அமைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தியிலும் அவ்வாறான பொறிமுறை ஒன்று செயற்படுத்தப்படும் என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, தமது மகன் நாமல் ராஜபக்ஷவிற்கு 30 வயதே ஆகின்ற நிலையில் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது என்றும், எனினும் தமது சகோதரர் வேட்பாளராக இருப்பார் என்றும் மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஆனால் மக்களுக்கு தேவையானவர் யார் என்பதை கட்சியே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் அவரது சகோதரர்களில் யார் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்பது பற்றிய விபரத்தை அவர் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.