டோக்கியோவில் ஏழைகள் பணமில்லாமல் உணவருந்தும் உணவகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சாதாரண ஏழை மக்கள் மிகப்பெரிய உணவகங்களில் உணவு சாப்பிடுவது மிகவும் அரிது. ஆனால், டோக்கியாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஏழைகள் பணமில்லாமல் உணவு அருந்த ஏற்பாடு செய்துள்ளார்கள். இதனை கேட்பதற்கு சற்று ஆச்சர்யமாகதான் இருக்கும். ஆனால், உண்மைதான். டோக்கியாவின் ஜின்போசோ மாவட்டத்தில் உள்ள மிரவ் சோகுடோ என்ற உணவகம் தான் அது.
இந்த உணவகத்தில் ஏழைகள் உணவு உண்ண விரும்பினால், தங்களுக்கு பிடித்ததை சாப்பிடலாம். ஒரே ஒரு நிபந்தனை மட்டுதான் உள்ளது. அது என்னவென்றால், வெறும் 50 நிமிடங்கள் மட்டும் உணவுப்பொருட்களை சுத்தம் செய்வது, உணவு மேசைகளை தூய்மை செய்வது போன்ற சில வேலைகளை மட்டும் செய்தால் போதும்.
உண்ணும் உணவுக்கு பதிலாக சில வேலைகள் அவ்வுளவுதான். இதில் இலவசம் என்பது இல்லை.மிரவ் சோகுடோ உணவகத்தை சிகாய் கோபயஷி என்ற பெண்மணி 2016 ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளார். ‘ஒருநாள் நான் சமைத்த உணவு எனது நண்பர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுதான் என்னை சொந்தமாக சாப்பாட்டுக் கடையைத் தொடங்க ஊக்குவித்தது.
மிரவ் சோகுடோ உணவகத்தை திறப்பதற்கு முன்பாக ஒரு மிகப்பெரிய உணவகத்தில் முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன்’ என்று கூறுகிறார் சிகாய். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் சிகாய் மட்டும் தான் தனது சாப்பாட்டுக் கடையில் நிரந்தரப் பணியாளராக இருக்கிறார்.
அப்படியென்றால், எல்லாம் சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள்தான் மற்ற பணியாளர்கள். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ஒரு ஷிப்டில்(4 மணி நேரம்) மட்டும் 500 பேர் பணியாற்றுகிறார்கள். அதாவது சாப்பிடுகிறார்கள். பணியாற்றுகிறார்கள். இது ஏழைகளுக்கானது மட்டுமல்ல, ஒரு புதுவிதமான உணவகம் என்பதில் சந்தேகம் இல்லை.