இனப்போரை நடத்தவில்லை – புதுடெல்லியில் மகிந்த

தாம் தமிழர்களுக்கு எதிராகப் போரை நடத்தவில்லை என்றும், விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்துக்கு எதிரான போரையே நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

புதுடெல்லியில் நேற்று, சுப்ரமணியன் சுவாமியின் ஏற்பாட்டில், விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தினால்  நடத்தப்பட்ட ‘இந்தோ- சிறிலங்கா உறவுகள்- முன்நோக்கிய பாதை’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“போரில் வெற்றி பெற்ற சிறிலங்கா படையினர் மீது அனைத்துலக சமூகத்தினால், சுமத்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை.

நாங்கள் எந்த நேரத்திலும், ஒரு இனவாத போரை நடத்தவில்லை:

எமது இராணுவ நடவடிக்கை நிச்சயமாக, தமிழ் சமூகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவில்லை. அது விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்துக்கு எதிரான போர்.

அவர்களின், செயற்பாடுகள் சிறிலங்காவுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, இந்திய மண்ணிலும் நீண்டிருந்தது.

இங்கு அவர்கள் ராஜிவ் காந்தி மற்றும் பலரை படுகொலை செய்தனர் என்பதை மறந்து விடக் கூடாது.

தீவிரவாதத்தை ஒழிப்பது ஒரு சமூகத்தின் நன்மைக்காகவோ அல்லது ஒரு நாட்டின் நன்மைக்கானதோ மாத்திரம் அல்ல.

சிறிலங்கா படையினர் போரின் இறுதிக்கட்டத்தில், சிறியதொரு பகுதிக்குள் சிக்கியிருந்த 3 இலட்சம் மக்களை பாதுகாப்பாக மீட்டனர்.

போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது மிகையான குற்றச்சாட்டு ஆகும். இது தவறான, மலினத்தனமான பரப்புரையாகும்.

தீவிரவாதிகளையும் உள்ளடக்கியதாக, 8000 பேருக்கு மேல் இழப்புகள் ஏற்படவில்லை.

போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த போது பிரித்தானிய வெளிவிவகாரச் செயலரும், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சரும், போர் நிறுத்தம் செய்யுமாறு அழைப்பு விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு போரை நிறுத்துவது, வருங்கால தலைமுறைகளுக்கு செய்யும் காட்டிக் கொடுப்பாக இருக்கும் என்று அவர்களுக்கு பதிலளித்திருந்தேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.