தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்துங்கள் எனவும் அதையும் மீறினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதால், அங்கு பரபரப்பு நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், மும்பையில் வேலை செய்பவரும் தேவரடியார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவருமான அய்யப்பனுக்கும்(27) மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.
நேற்று முன்தினம் இரவு மணமகன் அழைப்பும், விருந்தும் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை திருமணத்துக்கு ஏற்பாடு நடந்தது.
மணமேடையில் மணமகன் மாங்கல்யத்தை பெற்று, மணமகளின் கழுத்தில் கட்ட முற்பட்டார். அப்போது திடீரென்று மணமேடையை விட்டு எழுந்த மணமகள், நான் மைனர். எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.
என்னை பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்யச் சொல்கிறார்கள். உடனே திருமணத்தை நிறுத்துங்கள். மீறி தாலி கட்டினால் தற்கொலை செய்து கொள்வேன் என அங்கு உறவினர்கள் பலர் இருக்கும் போது கூறினார்.
அதுமட்டுமின்றி உடனடியாக தன்னுடைய செல்போனில் 100-க்கு போன் செய்து பொலிசாரிடம் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும், கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிசார் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.