சைக்கிள் ஓட்டுவதால் 10 நன்மைகள்

தினமும் சைக்கிளில்தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சைக்கிளில் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. வயது முதிர்ந்த மனிதர்கள்கூட நெடுந்தூரம் சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்று வருவார்கள். பைக், காரெல்லாம் வரத் தொடங்கியபிறகு சைக்கிள் உபயோகமற்றதாக மாறிவிட்டது. கிராமங்களில் கூட, சைக்கிள் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது.

இப்போது மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையின் கவனம் திரும்பியிருக்கிறது. உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக உடல், நோய்களின் கூடாரமாக மாறிவருகிறது. போதாக்குறைக்கு தற்போது பெட்ரோல், டீசல் விலையேற்றம் வேறு வதைக்க, பலர் சைக்கிளில் அலுவலகம் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் பைக் என்ற திட்டத்தை பல்வேறு நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன. கோவையில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது சென்னை நகரத்துக்கும் ‘ஸ்மார்ட் பைக்’ திட்டம் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சரி, சைக்கிள் ஓட்டுவதால் என்ன நன்மை?

சைக்கிள் பயன்படுத்துவது, ‘சுற்றுச்சூழலைக் காக்கும் என்பது ஒருபுறம் இருக்க, அதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 10 நன்மைகளை வரிசைப்படுத்துகிறார் பிசியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத்.

1. சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும்.

2. டைப் -1, டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். பிசியோதெரபிஸ்ட் ஶ்ரீநாத்

3. தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும்.

4. சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும்.

5. ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் வராது.

6. உடல் எடையைக் குறைக்க உதவும்.

7. சைக்கிள் ஓட்டுபவர்களது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

8. மனதளவில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

9. மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

9. அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையும்.

10. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றுவற்றுக்கான முக்கியமான காரணி, உடல்பருமன். சைக்கிள் ஓட்டுவதன்மூலம் உடல்பருமன் தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது. ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கௌவ் பல்கலைக்கழகம் (University of Glasgow) நடத்திய ஆய்வில், தினமும் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்பவர்களுக்கு 45 சதவிகிதம் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

* சைக்கிள் ஓட்டுபவர்கள், எடுத்தவுடன் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டாம். 15 நிமிடத்தில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தையும், தூரத்தையும் அதிகப்படுத்துங்கள்.

* தாங்கமுடியாத மூட்டு வலி, அதிக உடல் எடை, இதயக்கோளாறு போன்ற பிரச்னை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று சைக்கிள் ஓட்டவும்.

* வயது மற்றும் உடல்நிலையைப் பொறுத்தே, சைக்கிள் ஓட்டும் நேரமும் வேகமும் அமைய வேண்டும்.