அமெரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதியர், கைக் குழந்தையை சரியாக பராமரிக்கவில்லை எனக் கூறி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் சேலம் மாவட்டம் செட்டூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது மனைவி மாலா. இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
பிரகாஷ் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் புளோரிடாவில் மாகாணத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்களது மகள் ஹிமிஷாவின் இடது கையில் வீக்கம் ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், குழந்தையின் உடல்நிலை மற்றும் பொருட் செலவு குறித்து யோசித்து, மற்றொரு மருத்துவமனையில் ஆலோசனை கேட்க பிரகாஷ் மற்றும் மாலா முடிவு செய்துள்ளனர்.
அதன்படி மருத்துவரிடம் ஸ்கேன் எடுக்க வேண்டாம் என்றும், குழந்தையை அழைத்து செல்வதாகவும் பிரகாஷ்-மாலா தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு மருத்துவமனை நிர்வாகமோ, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, குழந்தை பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக பிரகாஷ்-மாலாவை பொலிசார் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பானது குறித்த தம்பதியரின் குழந்தையை கொண்டு சென்றுவிட்டது.
பின்னர், ஒருவழியாக பிரகாஷ் தம்பதி ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். எனினும், குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் பிரகாஷின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர்.
ஆனால், தனிப்பட்ட வழக்குகளில் தலையிடுவதில்லை என தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேலத்தில் உள்ள பிரகாஷின் பெற்றோர் தமிழக முதல்வரை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்துள்ளனர்.