அமைதியாக இருந்து ஒருவரது உயிரை மெதுவாக அழிக்கும் ஒரு கொடிய நோய் தான் புற்றுநோய். புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் பல வகை புற்றுநோய்களின் ஆரம்ப கால அறிகுறிகள் சரியாக தெரியாது. அப்படிப்பட்ட ஒரு வகை புற்றுநோய் தான் நுரையீரல் புற்றுநோய்.
பலரும் புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும் தான் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் புகைப்பிடிக்காதவர்களும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் புற்றுநோய் ஒருவரை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.
நுரையீரல் புற்றுநோய்க்கான காரணங்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேறுபடும். அதேப் போல் ஆண்களை அதிகம் தாக்கும் ஒரு வகை புற்றுநோயும் இதுவே. மேலும் உலகிலேயே நுரையீரல் புற்றுநோயால் தான் ஆண்கள் மற்றும் பெண்கள் அதிகம் மரணத்தை சந்திக்கின்றனர். பெண்களை விட ஆண்களை நுரையீரல் புற்றுநோய் அதிகம் தாக்குவதற்கு முக்கிய காரணம் புகைப்பிடிப்பது தான்.
இந்த கட்டுரையில் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் சில ஆரம்ப கால அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
தொடர்ச்சியான இருமல்
திடீரென்று நிற்காமல் இருமல் வருகிறதா? அப்படியானால் எச்சரிக்கையுடன் இருங்கள். அதுவும் ஒருவருக்கு இருமலானது ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இருந்தால், அது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே தொடர்ச்சியான வறட்டு இருமல் அல்லது சளியுடனான இருமல் வந்தால், சாதாரணமாக விட்டுவிடாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
இருமலில் மாற்றம் நாள்பட்ட இருமலில் ஏதேனும் மாற்றத்தைக் கண்டால், உடனே அதைக் கவனிக்கவும். குறிப்பாக புகைப்பிடிப்பவராக இருந்து இருமலில் மாற்றத்தைக் கண்டால், அதுவும் மிகவும் ஆழமான இருமல் அல்லது வித்தியாசமான சப்தத்துடனான இருமல் அல்லது இருமலின் போது இரத்தக்கசிவு அல்லது அசாதாரண அளவில் சளி வெளியேற்றம் போன்ற சமயங்களில் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
சுவாசிப்பதில் மாற்றம் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்தித்தால் அல்லது வேகமாக சுவாசித்தால், அது நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். நுரையீரல் புற்றுநோயால் சுவாசப் பாதையில் அடைப்பு இருந்தால் அல்லது மார்பு பகுதியில் உள்ள நுரையீரல் கட்டியில் இருந்து திரவம் வெளிவந்தால், சுவாசிப்பதில் மாற்றத்தைக் காணக்கூடும். ஆகவே சிறு வேலையில் ஈடுபட்ட பின்போ அல்லது படிக்கட்டுக்களை ஏறி இறங்கிய பின்போ, உங்களால் சரியாக சுவாசிக்க முடியாவிட்டால், சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்.
மார்பு பகுதியில் வலி நுரையீரல் புற்றுநோய் மார்பு, தோள்பட்டை அல்லது முதுகுப் பகுதியில் வலியை உண்டாக்கலாம். அதுவும் உங்களது மார்பு வலி கூர்மையாகவோ, லேசாகவோ, தொடர்ச்சியாகவோ அல்லது இடைவெளி விட்டோ வந்தால், உங்கள் மருத்துவரிடம் உடனே தெரிவியுங்கள். நுரையீரல் புற்றுநோயினால் வரும் மார்பு வலி மற்றும் அசௌகரியத்திற்கு மார்பு சுவற்றில் உள்ள வீக்கமடைந்த நிணநீர் முடிச்சுக்களில் உள்ள வீக்கத்தினால் தான் ஏற்படுகிறது.
மூச்சுத்திணறல் மூச்சுக் குழாயானது குறுகியோ, அடைப்புடனோ அல்லது அழற்சியுடனோ இருந்தால், சுவாசிக்கும் போது நுரையீரலில் இருந்து சப்தத்துடனான காற்று வெளியேற்றப்படும். ஒருவருக்கு மூச்சுத்திணறல் பல்வேறு காரணங்களால் ஏற்படும். இருப்பினும் மூச்சுத்திணறல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்று என்பதால், மருத்துவரை அணுகுங்கள். சிலர் மூச்சுத்திணறலானது ஆஸ்துமா அல்லது அழற்சியால் தான் ஏற்படும் என்று நினைத்து சாதாரணமாக விட்டுவிடுவார்கள். முதலில் இந்த பழக்கத்தைக் கைவிட்டு கவனமாக இருங்கள்
தடித்த, கரகரப்பான குரல் உங்கள் குடலில் திடீரென்று மாற்றத்தைக் கண்டால் அல்லது உங்கள் குரல் தடித்தோ அல்லது கரகரப்பாகவோ இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். கரகரப்பான குரல் சாதாரண சளியால் கூட ஏற்படலாம். ஆனால் இந்த கரகரப்பு 2 வாரத்திற்கும் அதிகமாக நீடித்திருந்தால், அதை சாதாரணமாக விட்டுவிடாமல் உடனே மருத்துவரிடம் சென்று சோதித்துக் கொள்ளுங்கள்.
உடல் எடை குறைவு ஒருவரது உடல் எடை காரணமின்றி அளவுக்கு அதிகமாக குறைந்தால், அது நுரையீரல் புற்றுநோய் அல்லது மற்ற வகை புற்றுநோயினால் கூட இருக்கலாம். புற்றுநோயினால் உடல் எடை குறைவதற்கு காரணம், புற்றுநோய் செல்களானது உடல் செல்களை முழுமையாக பயன்படுத்துவது தான்.
எலும்பு வலி நுரையீரல் புற்றுநோய் எலும்புகளில் எல்லாம் புற்றுநோய் செல்களைப் பரப்பி, முதுகு அல்லது உடலின் இதர பகுதிகளில் எல்லாம் வலியை உண்டாக்கும். முக்கியமாக இந்த வலியானது இரவு நேரத்தில் மல்லாக்க படுக்கும் போது தீவிரமானதாக இருக்கும். இந்நேரத்தில் ஏற்படும் வலி எலும்பு வலியா, தசை வலியா என்று கூட வேறுப்படுத்திப் பார்க்க முடியாது. அந்த அளவில் இரவு நேரத்தில் எலும்பு வலி மோசமாக இருக்கும் மற்றும் அசைய முடியாத அளவில் இருக்கும்.
தலைவலி என்ன வியப்பாக உள்ளதா? ஆம், தலைவலி கூட நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். இதற்கு புற்றுநோய் செல்களானது மூளை வரை பரவி இருப்பது தான் காரணம். இருப்பினும், அனைத்து வகையான தலைவலிக்கும் நுரையீரல் புற்றுநோய் தான் காரணம் என்பதில்லை. சில சமயங்களில் நுரையீரலில் உள்ள கட்டிகளானது, முன்புற பெருநாளத்தில் அழுத்தத்தைக் கொடுக்கிறது. இந்த பெரிய நாளம் தான் உடலின் மேல் பாகங்களில் இருந்து இதயத்திற்கு இரத்தத்தை ஓடச் செய்கிறது. இந்த நாளத்தில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால், அது தலைவலியைத் தூண்டுகிறது.
அதிக ஆபத்தில் உள்ள மக்கள் நுரையீரல் புற்றுநோய் குறிப்பிட்ட வகை மக்களை அதிக அளவில் தாக்கி, உயிருக்கே உலை வைக்கும். அந்த வகை மக்கள் யார் என்பதைத் தொடர்ந்து படியுங்கள். * புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தவர்கள் மற்றும் புகைப்பிடித்துக் கொண்டிருப்பவர்கள். * 55 முதல் 80 வயதிற்கு இடைப்பட்ட மக்கள். * கடந்த 15 வருடங்களாக புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டவர்கள்.
எளிய திரையிடல் உதவலாம் மார்பக எக்ஸ்-ரே கொண்டு ஆரம்ப கால நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய முடியாது. இருப்பினும், 2011 இல் வெளிவந்த ஆய்வில், குறைந்த டோஸ் சிடி-ஸ்கேன் மூலம் 20 சதவீதம் நுரையீரல் புற்றுநோயினால் ஏற்படும் இறப்புக்களைக் குறைக்க முடிவதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது போன்ற உணர்வு இருந்தால், குறைந்த டோஸ் சிடி-ஸ்கேன் செய்து பாருங்கள்.