தொடரும் ஆணவக் கொலைகள் – ஜாதிமாற்று திருமணம் செய்ததால் பெண்ணின் பெற்றோர் வெறிச்செயல்

தெலுங்கானாவில் ஜாதி மாற்றி திருமணம் செய்துகொண்டதால் இளம்பெண்ணின் கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
நாடெங்கும் பரவி இருக்கும் மிகப்பெரிய கொடிய நோய் ஜாதி. எதிலும் ஜாதி, எதற்கெடுத்தாலும் ஜாதி. இந்த ஜாதிக்கொடுமையால் ஜாதி மாற்று திருமணம் செய்யும் பல அப்பாவிகள் கொலை செய்யப்படும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. ஆணவக் கொலை செய்வோர் கடுமையாக தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரித்த போதிலும் யாரும் திருந்தியபாடில்லை.
தெலுங்கானாவில் வாலிபர் ஒருவர் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் 6 மாதத்திற்கு முன்னர் தனது காதலனை கரம் பிடித்தார். இருவரின் வாழ்க்கையும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்ந்தது. அந்த பெண் கர்ப்பமுற்றார்.
பெற்ற பெண் தங்களின் குடும்ப மானத்தை வாங்கிவிட்டாள், மகளையும் அவரது கணவரையும் பழிவாங்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர் பெண்ணின் பெற்றோர்.
இதனிடையே அந்த பெண் தனது கணவருடன் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார். செக்கப் முடித்த பிறகு வெளியே வந்த போது அந்த பெண்ணின் அப்பா அனுப்பிய ஆட்கள், அந்த பையனை இரும்பு ராடால் தலையில் பலமாக தாக்கினர். இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலே பலியானார். மனைவி கண்முன்னே கணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.