இந்திய நுழைவிசைவு: சிவாஜிலிங்கத்துக்கு மறுப்பு, டக்ளசுக்கு அனுமதி!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஆசியா பவுண்டேசனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு நேற்று, ஒரு வாரகால செயலமர்வுக்காக  ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றது.

எனினும், இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெறவிருந்த வட மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாளை மறுநாள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியுள்ளதால், இந்தப் பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.

சிவாஜிலிங்கம் தவிர ஏனைய வட மாகாணசபை உறுப்பினர்கள் சிறிலங்காவின் அதிகாரபூர்வ கடவுச்சீட்டுகளை வைத்துள்ளனர்.எனவே அவர்கள் வருகையின் பின்னர் இந்திய நுழைவிசைவைப் பெறும் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால், சிவாஜிலிங்கம் சாதாரண கடவுச்சீட்டையே கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை நீதிமன்றத்தில், 28 ஆண்டுகளாக நடக்கு கொலை வழக்குடன் தொடர்புபட்டுள்ள, டக்ளஸ் தேவானந்தாவுக்கு நுழைவிசைவு வழங்கப்பட்ட போதும், கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தனக்கு நுழைவிசைவை நிராகரித்து விட்டதாக சிவாஜிலிங்கம் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.