சீனா மீது புதிய வரி விதிப்பு : அமெரிக்கா

நாளை அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனப் பொருட்கள் மீது புதியதாக சுமார் 2000 கோடி டாலர் அளவிலான வரி குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல்க்ள் வந்துள்ளன.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வர்த்தகப் போர் தொடர்வது தெரிந்ததே. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறக்குமதி வரியை 25% ஆக்கினார். இதனால் சீன பொருட்களின் விலை அமெரிக்காவில் கடுமையாக உயர்ந்தது. அதனால் சீனாவும் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது வரியை உயர்த்தியது. சீனா மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதியை அதிகரித்தது.

நாளை அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா மீது புதிய வரி விதிப்பு விகிதத்தை அறிவிக்க உள்ளார் எனவும் அந்த விகிதங்கள் சுமார் 10% இருக்கலாம் எனவும் அமெரிக்க பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. முன்பு அறிவித்த 25% விட இது குறைவாக இருக்கலாம் என அமெரிக்க வர்த்தகர்கள் கூறுகின்றனர். இந்த வரி விதிப்பின் மதிப்பு சுமார் 2000 கோடி டாலர் இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

இந்த வரி விதிப்பில் இணைய தள தொழில்நுட்பக் கருவிகள், மின்னணு சாதனங்கள், சீனா கடல் உணவு, ரசாயனங்கள், சைக்கிள்கள், மற்றும் குழந்தைகளுக்கான வாகனங்கள் ஆகியவை இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றிலிருந்து ஒரு சில பொருட்களை நீக்கவும் வாய்ப்புள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர், “அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவின் அநியாய வர்த்தக நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதை மேலும் தொடர்வது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். சீனாவுடனான நீண்ட நாள் வர்த்தகத் தொடர்பை நாங்கள் மறக்கவில்லை.” எனக் கூறி உள்ளார். ஆனால் புதிய வரி விதிப்பு விகிதத்தை பற்றி அவர் ஏதும் கூற மறுத்து விட்டார்.