அதிக நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய் வருமாம்!

தினசரி நாம் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். என்றாவது ஒரு உடல் அசதி அல்லது உடல் நல குறைப்பாட்டின் காரணமாக அதிக நேரம் தூங்கலாம்.

ஆனால் அதையே பழக்கமாக கொண்டு 8 மணிநேரத்திற்கு அதிகமாக தூங்குவதால் உடல்நலனானது பாதிக்கப்படுகிறது.

மேலும் இதயநோய் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், குறைந்த நேரம் தூங்குபவர்களை விடவும், அதிக நேரம் தூங்குபவர்களுக்கு 3 மடங்கு இதயநோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியின் மூனிச் நகரில் இதயநோய் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மருத்துவ நிபுணர் எபாமேனோண்டஸ் ஃபௌண்டாஸ் கூறுகையில், 10 லட்சம் இளைஞர்களிடம் இது குறித்துத் தகவல் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

குறைவாகத் தூங்குவதால் இதயநோய் வருவது போன்று, தொடர்ந்து அதிகமாகத் தூங்கினாலும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 11 ஆய்வுகள் மூலம் இது தெரியவந்துள்ளது.

மேலும் எந்தெந்தக் காரணிகளால் இதயம் பாதிக்கப்படும் என்பதைக் கண்டறிய, இன்னும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஆய்வின்படி, குறைவாகத் தூங்குபவர்களுக்கு 11 சதவிகிதம் இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், தொடர்ந்து அதிகமாகத் தூங்குபவர்களுக்கு 33 சதவிகிதம் வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதாவது, மூன்று மடங்கு அதிகமாக இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க இதயக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வில், 8 மணி நேரத்துக்கு அதிகமாக தூங்குபவர்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது என்றும், பக்கவாதம், இதயக் குழாய் நோய் ஆகியவற்றின் பாதிப்பையும் அதிகரிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

9 மணி நேர தூக்கமானது, 14 சதவீதம் அளவுக்கு இதய பாதிப்பு இறப்பு விகிதத்தை உருவாக்கும் நிலையில், 10 மணி நேரத் தூக்கமானது இந்த பாதிப்புகளை 30 சதம் அளவுக்கு உயர்த்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறைவான தூக்கமும், இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், 7 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களிடம் இதுபோன்ற விளைவுகளை பார்க்க முடியவில்லை.

ஆனாலும், சரியான அளவிலான தூக்கம் இல்லாமல் இருப்பது, இதய குழாய்களின் பாதிப்புகளை உயர்த்தும் என்பது இந்த ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.