தூய்மையான யாழ்ப்பாணத்தை உருவாக்குவேன் – மேயர் ஆர்னோல்ட்

யுத்தத்தினால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான நகராக உருவாக்க உறுதி பூண்டுள்ளேன் என யாழ்.நகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

கனடாவிற்கு விஜயம் செய்துள்ள அவர், அங்கு இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“யாழ்ப்பாண நகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் கலாசார தலைநகராக இருந்து வருகிறது. அந்த நகரத்தின் முதல்வராக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். மாநகர சபைக்குள் நுழைய முன்னர் கட்சி அரசியலை மறந்துவிட்டு மக்கள் சேவையை மட்டும் மனதில் கொண்டு உள்நுழையுமாறு எல்லோரையும் கேட்டுக் கொண்டேன்.

யாழ்ப்பாண நகரை ஒரு தூய்மையான, அழகான, பொலிவான நகராக மாற்றியமைக்க நான் உறுதிபூண்டுள்ளேன். அதற்கு புலம்பெயர் தமிழர்களின் உதவியும் தேவை. போரினால் அழிவுண்ட மாநகர சபைக் கட்டடத்தை ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியோடு மீளக்கட்டியெழுப்ப இருக்கிறோம்.

யுத்த காலத்தில் நாம் தனி நாடு கேட்டோம். இப்போது அதைக் கேட்கவில்லை. இப்போது கேட்பது ஒருமித்த நாட்டில் சுயநிர்ணய அடிப்படையில் எங்களை நாங்களே ஆளக்கூடிய அதிகாரப்பகிர்வு.

தேர்தல் பரப்புரையில் அரசியல் தீர்வையும், மீள்கட்டுமானம், மறுவாழ்வு, வாழ்வாதார மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என்பவற்றையே வலியுறுத்தினோம்.

தமிழ் மக்களின் ஒன்றுபட்ட பலமாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைபைச் சிதைப்பதன் மூலம் தமிழ் மக்களைக் கூறுபோட நினைப்பவர்களின் உள்நோக்கம் என்ன? புலம் பெயர்ந்தோர் ஏன் அவர்களுக்குத் துணை போகிறார்கள்?

மாகாண முதலமைச்சர் தன் கட்சித் தலைமைக்குக் கட்டுப்படாமல், கட்சிக்குள்ளேயே ஒற்றுமையைச் சிதைத்து மிக மோசமான நிர்வாகச் சீர்கேடுகளை அனுமதித்த காரணத்தாலேயே நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செல்வாக்கு சரிந்து காணப்பட்டது.

யாழ். மாநகர சபையில் கட்சி பேதங்களை ஒதுக்கிவிட்டு அனைவரையயும் அரவணைத்து சிறப்பாகப் பணியாற்றுகின்றேன்.

யாழ். மாநகர சபைக்கு வந்து திரும்பிய நிதி, கிடப்பில் போடப்பட்ட நிதி, புதிதாகக் கிடைக்கும் நிதி அனைத்தையும் முடியுமானவரை மீளப்பெற்று நகரை அபிவிருத்திச்செய்ய இருக்கின்றேன்.

விமர்சனங்களைக் கவனிக்காமல் எது சரியோ அதனைச் செய்துகொண்டு எனது இலக்கை நோக்கிச் செல்கின்றேன்.

போருக்கான சூழ்நிலையை உருவாக்கி மீண்டும் தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள். அது மக்களை மீண்டும் நிரந்தர அழிவிற்குள் தள்ளிவிடும். இதனால் யார் நன்மைபெற விரும்புகிறார்கள்?

தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்டுக்கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் சேர்க்கப்பட்டிருந்ததாலும் புதிய அரசியல்யாப்பு நிறைவேற 2/3 பெரும்பான்மையைக் காட்டவேண்டி இருப்பதாலும் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தோம். அது தவிர அரசைக் காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கில்லை.

புதிய அரசியல் திட்டவரைவில் இருக்கும் முற்போக்கு அம்சங்கள் பற்றி யாரும் சொல்வதில்லை. ஊடகங்களும் அதுபற்றி எழுதுவதே இல்லை. இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருப்பதாகவும் வெறும் பொய்களை ஏன் திரும்பத் திரும்பக் கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்?“ என தெரிவித்துள்ளார்.