நாவிதன்வெளி பிரதேச சபை பெண் அலுவலரின் தாலிக்கொடியை வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தின் போது சுமார் 10 பவுண் தங்கத் தாலிக்கொடியே பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நாவிதன்வெளி பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றும் பெண் ஒருவர், அவர் கடமையாற்றும் அலுவலகத்திலிருந்து நாவிதன்வெளியிலுள்ள தனது வீட்டிற்குச் சென்று விட்டு மீண்டும் அலுவலகத்திற்கு கடமைக்காகச் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அவரை வழிமறித்துள்ளனர்.
இதன்போது, சற்றும் எதிர்பாராத விதத்தில் கணப்பொழுதில் கொள்ளையர்கள் மிக லாவகமாக குறித்த பெண் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.