மைனா நடிகையை நள்ளிரவில் கன்னத்தில் அறைந்த வில்லன் நடிகர்..!

படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை, வில்லன் நடிகர் ஒருவர் நள்ளிரவில் அவரது அறையிலேயே கைநீட்டி அறைந்த விஷயம் கசிந்து, தற்போது திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையா என்கிற விசாரணையில் இறங்கியபோது அது உண்மைதான் என்பதும், அதற்கான காரணமும் இப்படியெல்லாம் கூட நடக்குமா என நம்மை ஆச்சர்யப்பட வைத்தன .

சமீபத்தில் ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்து, மதுராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாவது வாரமும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தொட்ரா படத்தில் வில்லனாக அறிமுகமாகி இருப்பவர் எம்.எஸ்.குமார்.

கதாநாயகியின் அண்ணனாக படம் முழுதும் வந்தாலும், ‘அட யார் இந்த புதுமுகம்’ என ரசிகர்களின் மனதில் கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் ஒரு மாற்று வில்லன் என்றே சொல்லலாம் இவரை. தொட்ரா படத்தில் இவருக்கு மனைவியாக நடித்துள்ளவர் மைனா ‘புகழ்’ சூசன்..

எதனால் மைனா சூசனை கைநீட்டி அறைந்தார், அதுவும் நள்ளிரவில் என்கிற கேள்விக்கான விடையை கேட்டு விடலாம் என வில்லனாக நடித்த எம்.எஸ்.குமாரையே தொடர்புகொண்டோம்..

‘இந்தப்படத்தில் எனக்கு மனைவியாக நடித்த மைனா சூசன், எனது தங்கையாக நடித்த வீணா பற்றி தவறாக பேசுவது போலவும், உடனே நான் கோபத்துடன் அவரை கைநீட்டி அடிப்பது போலவும் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது..என்னதான் வில்லனாக நடித்தாலும், பெண்களை கைநீட்டி அடிப்பது என்பது எனக்கு பழக்கமும் இல்லை.. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. ஆரம்பத்தில் இருந்து என்னை கவனித்து வந்த மைனா சூசன் இந்தக் காட்சியில் நான் இயல்பாக நடிக்க மாட்டேனோ என்கிற முடிவிற்கே வந்துவிட்டார்.

அதனால் அந்த காட்சியை எடுப்பதற்கு முதல் நாள் இரவு இயக்குநர் மதுராஜிடம் போனில் தொடர்புகொண்டு எம்.எஸ்.குமாரையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்.. நாளை எடுக்கப்பட இருக்கும் கன்னத்தில் அறையும் காட்சியை இப்போதே ஒத்திகை பார்த்து விடுவோம் என கூறினார். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் சமாதானமாகவில்லை.

அதனால் இரவு பத்து மணிக்கு மேல் ஆன நிலையில் நானும் மதுராஜூம் அவரது அறைக்கு சென்றோம். அவரது கன்னத்தில் அறையும்படி மைனா சூசன் கூறினார்.. ஆனால் பத்து, பனிரெண்டு முறை அறைவது போல நடித்தும் அது இயல்பாக வரவில்லை.. ஆனால் அவரோ நாளை படப்பிடிப்பில் இதேபோல சரியாக அறையாமல் சொதப்பினால் அது என் நடிப்பிலும் குறை உள்ளது போல ஆகிவிடும்..

எத்தனை மணி ஆனாலும் நீங்கள் தத்ரூபமாக என்னை அறைந்தால் தான் இங்கிருந்தே போகமுடியும் என்றார். அவர் அப்படி சொன்னனதும் எனக்கு கோபம் வந்து உடனே பளாரென ஒரு அறை விட்டேன். அப்படியே அருகில் இருந்த டீபாயில் மேல் கவிழ்ந்து விழுந்தவர் சில நொடிகள் கழித்து வலியுடன் கன்னத்தை தடவியபடி இதேபோல நாளை படப்பிடிப்பிலும் செய்து விடுங்கள்.. அவ்வளவுதான் என்று கூறினார்.

மறுநாள் படப்பிடிப்பு தளத்திலும் ஒரு சின்ன பதற்றம் காரணமாக முதலில் டேக் வாங்கினேன்.. ஆனால் என்னைப் பார்த்து நேற்று அவ்வளவு ரிகர்சல் பார்த்தும் இப்படி சொதப்புகிறீர்களே என மைனா சூசன் கேட்க, அந்த கோபத்துடனேயே மீண்டும் வேகமாக அறைந்தேன்.. அந்த காட்சி ஓகே ஆனது.. ஆனால் பாவம், மைனா சூசனின் ஒரு பக்க, தோடு அறுத்து விழுந்ததோடு கன்னமும் வீங்கிவிட்டது.. அதன்பின் அவரை வைத்து அன்று எடுக்க வேண்டிய காட்சிகளை எடுக்க முடியாமல் ஒருநாள் கழித்துதான் எடுத்தோம் ” என மைனா நடிகையை கைநீட்டி அறைந்த கதையை ஒரு சினிமா காட்சி போல விவரித்தார் எம்.எஸ்.குமார்.

இதில் என்ன பியூட்டி என்றால், சூசன் நடித்த மைனா படத்திலும் அவரது கணவராக நடித்த புதுமுகம் சேது, சூசனை கைநீட்டி அறையவேண்டிய காட்சியில் தயங்கினாராம். அவருக்கும் இப்படி கிளாஸ் எடுத்தாராம் சூசன்.. தன்னை அறைந்ததன் மூலம் அந்தப் படத்தில் பேசப்பட்டாராம் சேது. அதேபோல என்னை அறைந்ததால் நீங்களும் ரசிகர்களிடம் பேசப்படுவீர்கள் என ஒரு சென்டிமென்ட் தகவலையும் கூறினாராம் சூசன்.

இயல்பாக நடிக்கவேண்டுமென்றால் இப்படித்தான் போல என புதுமுக வில்லன் எம்.எஸ்.குமார் மனதில் பதிந்துவிட்டதால், அதன் விளைவாக இன்னொரு களேபரமும் அரங்கேறியதாம். அதாவது படத்தில் ஒரு கல்குவாரியில் நாயகன் பிருத்வியை கீழே தள்ளிவிட்டு, தரையோடு சேர்த்து அவர் முகத்தை செருப்பு காலால் எம்.எஸ்.குமார் அழுத்த வேண்டும்.. அதாவது அழுத்துவது போல நடித்துவிட்டு, அப்படியே நசுக்குவது போல உடலை அப்படியும் இப்படியும் அசைக்க வேண்டும்.

ஆனால் எம்.எஸ்.குமாரோ தத்ரூபமாக காட்சி அமையவேண்டும் என்கிற எண்ணத்தில் நிஜமாகவே பிருத்வியை ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடக்கும் தரையில் வைத்து செருப்புக்காலால் அவர் கன்னத்தை அழுத்தியதோடு, காலை வைத்தபடியே அப்படியே நசுக்குவது போல திருப்பினாராம்.. காட்சி என்னவோ தத்ரூபமாக வந்துவிட்டது.. ஆனால் பிருத்வி தான் வலியால் துடித்துப்போனாராம்..

அதன்பின் இயக்குநர் ஓடிவந்து அவரை விலக்கிவிட்டு, எந்தெந்த காட்சிகளில் தரூபமாக நடிக்கவேண்டும், எந்தெந்த காட்சிகளில் தரூபமாக நடிப்பதுபோல பாவ்லா செய்யவேண்டும் என விலக்கினராம். இப்போது கூட பிருத்வியின் கன்னத்தில் அந்த தழும்பை பார்க்கலாம் என்கிறார் எம்.எஸ்.குமார். ஆக முதல் படத்திலேயே தனது நடிப்பில் எம்.எஸ்.குமார் தேறிவிட்டார் என்றே சொல்லலாம்.

தொட்ரா படத்தில் இவரின் நடிப்பை பார்த்துவிட்டு பலர் தங்கள் படங்களில் நடிக்க அழைக்கின்றனராம். ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என தேர்வு செய்யாமல் நல்ல கதைகளில் நடித்து நிலைக்க வேண்டும் என்பதே விருப்பம் என்கிறார் எம் எஸ் குமார்.